அரியலூர் மாவட்டம்,  மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரசித்தி பெற்றதும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. சிவராத்திரி மற்றும் சனி மகா பிரதோஷத்தையொட்டி நேற்று இரவு 7.30 மணியளவில் முதல் கால பூஜையும், இரவு 10.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், நள்ளிரவு 1.30 மணியளவில் 3-ம் கால பூஜையும், அதிகாலை 4.30 மணியளவில் 4-ம் கால பூஜையும் நடைபெற்றது. இதில், உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரி விழாவையொட்டி இரவு முழுவதும் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.  இதனை தொடர்ந்து தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் சிவராத்திரி மற்றும் சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிவபெருமான் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து விஸ்வநாதரை நோக்கி தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்கள் பாடப்பட்டன. இறைவனுக்கு ஷோடச உபசாரங்கள் செய்யப்பட்டு மங்கள ஆரத்தி நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சரண கோஷங்கள் எழுப்பினர்.

 



 

இதனை தொடர்ந்து இரவு 11 மணியளவில் 2-ம் கால பூஜையும், அதிகாலை 2 மணியளவில் 3-ம் கால பூஜையும், 4 மணியளவில் 4-ம் கால பூஜையும் நடைபெற்றது. சிவராத்திரியையொட்டி மிருதங்கம், நாதஸ்வரம், வயலின் கச்சேரிகள் நடைபெற்றன. விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 



 

இதேபோல் ஆண்டிமடம்,  விளந்தையில் அறம்வளர்த்த நாயகி தர்மசம்வர்த்தினி மேல அகத்தீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா நேற்று மாலை தொடங்கியது. இதையொட்டி கோவில் முன்பு உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிவராத்திரியையொட்டி பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மேல அகத்தீஸ்வரருக்கு முதற்கால பூஜை இரவு 9 மணிக்கும், 2-ம் கால பூஜை இரவு 11 மணிக்கும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 3 மணிக்கும், 4-ம் கால பூஜை அதிகாலை 6 மணிக்கு நடைபெற்றது. இதேபோல் திருக்களப்பூர் திருக்கோடிவனத்தீசுவர், விளந்தை அழகு சுப்பிரமணியர், கூவத்தூர் விஸ்வநாதர், அழகாபுரம் அழகாபுரீஸ்வரர், பெரிய கிருஷ்ணாபுரம் படைவெட்டி மாரியம்மன் கோவிலில் உள்ள திருநீலகண்டேஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் சிவராத்திரி மற்றும் சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.