நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரதீப்குமார் தலைமையில்  திறக்கப்பட்டது. பின்னர் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் ஆகியவை இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.




9 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பி வைப்பு


மணப்பாறை தொகுதியில் 324 வாக்கு பதிவு மையங்களுக்கு வாக்குபதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் தலா 388ம், விவிபேட் 421ம், ஸ்ரீரங்கம் தொகுதியில் 339 வாக்கு பதிவு மையங்களுக்கு வாக்குபதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் தலா 406ம், விவிபேட் 440ம், திருச்சி(மேற்கு) 270 வாக்குபதிவு மையங்களுக்கு வாக்குபதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் தலா 324ம், விவிபேட் 351ம், திருச்சி (கிழக்கு) 255 வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் தலா 306ம், விவிபேட் 331ம், திருவெறும்பூரில் 296 வாக்குபதிவு மையங்களுக்கு வாக்குபதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவி 355ம், விவிபேட் 384ம், லால்குடி 251 வாக்குபதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டுகருவி 301ம், விவிபேட் 326ம், மண்ணச்சநல்லூர் 273 வாக்குபதிவு மையங்களுக்கு வாக்குபதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டுக்கருவி தலா 327ம், விவிபேட் 354ம், முசிறி 260 வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குபதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டுகருவி தலா 312ம், விவிபேட் 338ம், துறையூர் 279 வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவி தலா 334ம், விவிபேட் 362ம்  அனுப்பி வைக்கப்பட்டது.




மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப்குமார் தகவல்..


திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள்  குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 547 வாக்குசாவடி மையம் உள்ளது. 3 ஆயிரத்து 053 வாக்குப்பதிவு இயந்திரம், 3 ஆயிரத்து 053 கட்டுப்பாட்டு கருவிகள், 3 ஆயிரத்து 307 விவிபேட் இயந்திரங்கள் உள்ளது. மண்டல அலுவலர்களுக்கு இன்று பயிற்சி வழங்கப்படுகிறது. வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வரும் 24ம் தேதி பயிற்சி வழங்கப்பட உள்ளது.


திருச்சியில் நேற்று முன்தினம் மாலை வரை ரூ.70 லட்சம் வரை ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.7 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேல், வருமான வரித்துறையில் தெரிவிக்கப்படும் ஆவணம் சரியாக இருந்தால் திருப்பி ஒப்படைக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் கூறினார்.


மேலும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டும், மறைக்கப்பட்டும் வருகிறது. இதில் இறந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டாம். சிலைகளின் கீழே உள்ள பெயர்களை மட்டும் மறைக்க என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது என்று தெரிவித்தார்.