மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகும் என்றும் கடந்த வாரம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில், ஏப்ரல் 19-ம் தேதி முதற்கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவிலேயே தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.


மக்களவைத் தேர்தல்:


இதற்கான, தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், தி.மு.க தனது முதல் தேர்தல் பரப்புரை கூட்டத்தை திருச்சி அருகே சிறுகனூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியது..




திருச்சி இந்தியாவுக்கே திருப்புமுனையாக அமையும்..


டெல்லி செங்கோட்டையை யார் கைப்பற்ற வேண்டும் என்று தீர்மானிக்க இந்த மலைக்கோட்டை மாநகரில் கடல்போல் திரண்டிருக்கும் தமிழ்ச் சொந்தங்களே.. திருச்சி என்றாலே திருப்புமுனை தான். இப்போது இந்தியாவுக்கே திருப்புமுனை ஏற்படுத்த நாம் திரண்டிருக்கிறோம். பல திருப்புமுனைகளை தமிழ்நாட்டுக்கு கொடுத்து, தமிழினத்தின் முன்னேற்றத்துக்காக தன்னுடைய வாழ்நாளெல்லாம் உழைத்த தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டுப் பரிசாக, ஒரு மகத்தான வெற்றியை கொடுப்பதற்கான துவக்கமாக இங்கு திரண்டிருக்கிறோம்.வெற்றி என்றால் எப்படிப்பட்ட வெற்றி? 40/40 ஆகும்.


எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருப்பது இந்தத் திருச்சிதான். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிற்க வேண்டும் என்று 1956-ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது திருச்சி மாநாட்டில்தான். திருச்சி பாதை எப்போதுமே வெற்றிப் பாதை. அதன் அடையாளமாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆறு முறை ஆட்சிப் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.




மோடிக்கு தேர்தல் பயத்தால் தூக்கம் வரவில்லை 


பாசிச பா.ஜ.க.வை வீழ்த்தி, இந்தியா கூட்டணியின் ஆட்சியை ஒன்றியத்தில் ஏற்படுத்துவதற்காக நடப்பதுதான், இந்த நாடாளுமன்றத் தேர்தல். தேர்தல் என்பதால் பிரதமர், இப்போது இந்தியாவில் இருக்கிறார். அதனால் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இல்லை என்றால், பெரும்பாலும் வெளிநாட்டில்தான் இருப்பார்.

 

சமீபத்தில் சேலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி , “தமிழ்நாட்டில் அவருக்கு செல்வாக்கு அதிகமாகிவிட்டதால், தி.மு.க.வினருக்குத் தூக்கம் வரவில்லை” என்று பேசியிருக்கிறார். உண்மையில், தன்னோட ஆட்சி முடியபோகிறது என்று, மோடிக்குத்தான் தூக்கம் வரவில்லை. அவருக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி பயம், அவரின் முகத்திலும், கண்ணிலும் நன்றாகத் தெரிகிறது. சரி, தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாரே, அவரிடம் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். அதுக்கு ஒருமுறையாவது பதில் சொன்னாரா? வாரா வாரம் வந்தாலும் அவர் பதில் சொல்லவில்லை! இனி வந்தாலும், சொல்லவும் முடியாது.

தமிழ்நாட்டுக்கு சிறப்புத் திட்டம் என்ன?




10 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரு பிரதமரால், தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டம் என்று ஒன்றே ஒன்றைக்கூட சொல்ல முடியுமா? இவர் நம்மை விமர்சிக்கிறார். இப்போது நான் சொல்கிறேன், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் மூன்று ஆண்டுகளாக, மக்களாகிய உங்களுக்காகச் செய்த சாதனைகளின் பட்டியல் சொல்லவா. சொன்னால் இன்றைக்கு ஒரு நாள் போதாது. கடந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க. அரசு இஷ்டத்திற்கு ஏற்றிய பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலை குறைக்கப்படும். தமிழ்நாட்டு ஏழை-எளிய மாணவர்களின் உயிரை பழிவாங்கும் நீட் தேர்வு ஒழிக்கப்படும். மாநிலங்களுடைய உயிர்மூச்சாக இருக்கின்ற நிதி உரிமைக்கு வேட்டு வைக்கும், தற்போதைய ஜி.எஸ்.டி முறை சீர்திருத்தம் செய்யப்படும் என்றார்.