திருச்சி மாநகர்  EB சாலையில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் நமது ஏ.பி.பி. நாடு செய்திக்கு அவர் அளித்த பேட்டியில், “திருச்சியை பொருத்தவரை மும்முனைப் போட்டிகள் கிடையாது, இருமுனைப் போட்டிகள் மட்டுமே, ஒன்று மண்ணின் மைந்தன் எனக்கும், மற்றொன்று பீடி சிகரெட் விக்கிறவர் மற்றும் மண் அழுகிற கும்பல் என இருமுனை போட்டியாக தான் உள்ளது. வாரிசு அரசியலை எதிர்த்து கட்சியிலிருந்து விலகிய அவரின் வாரிசுக்கு சீட் ஒதுக்கப்பட்டு கண்ணீர் வடிக்கும் நாடகம் நடித்து கொண்டிருக்கிறார். திருச்சி மக்கள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடந்த பல ஆண்டுகளாக திருச்சியில் எந்த ஒரு முன்னேற்றமும் அடையக்கூடிய திட்டங்களை யாரும் செயல்படுத்தவில்லை. குறிப்பாக சாலைகள் விரிவாக்கம், புதிய தார் சாலை அமைப்பது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது, பாதாள சாக்கடை திட்ட பணிகளை அமல்படுத்துவது, தேசிய நெடுஞ்சாலைகளில் ரிங் ரோடு அமைப்பது போன்ற திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல் இருப்பதால், மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.


மேலும் அவசர அவசரமாக திருச்சியில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. என்னை பொறுத்தவரை பஞ்சப்பூர்  பேருந்து நிலையம் அமைக்கும் பணியை முறையாக செயல்படுத்தவில்லை, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போன்றுதான், பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் நிலைமை அமையப்போகிறது என்பது எனது கருத்து. திருச்சி பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரை திமுக, அதிமுக கூட்டணி வலுவாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. திருச்சியை பொறுத்தவரை தேர்தலில் திமுக நேரடியாக போட்டியிட்டால் படுதோலி அடைவார்கள் என்பதால்தான், கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்புகள் கொடுத்து வருகிறார்கள்.




விருப்பமே இல்லாமல் ஒரு வாரிசு வேட்பாளர் 


ஒரு பலியாடாக வாரிசு அரசியலில் விருப்பமே இல்லாத, ஒரு வாரிசு வேட்பாளரை நிறுத்தி உள்ளார்கள். அதேபோன்று அதிமுகவில் முன்னாள் எம்பி, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இருந்தும் அவர்கள் யாரும் இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை அப்போது அவர்களுடைய நிலை என்னவாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். திருச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இனிமையாக பெற்று தர முடியும் என்பதால் மக்கள் இந்த மண்ணின் மைந்தன் எனக்கு மிகுந்த ஆதரவு அளிக்கிறார்கள்.  


திருச்சியில் முதலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திட தொழில் பூங்காக்களை கொண்டு வருவேன். அதேபோன்று திருச்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள் சிலர் அதிகாரங்களை பயன்படுத்தி அராஜக போக்கில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் உள்ளார்கள். திருச்சி தொகுதியை பொருத்தவரை அன்றாட கூலி வேலை செய்பவர்கள் அடித்தட்டு மக்களே அதிகமாக உள்ளார்கள், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல புதிய திட்டங்களை செயல்படுத்துவேன். குறிப்பாக மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தயுடன், திருச்சி தொகுதியை மேம்படுத்த பல்வேறு நிறுவனங்களை அழைத்து வந்து, வேலைவாய்ப்பை உருவாக்குவேன்” என வாக்குறுதி அளித்தார்.