பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் வேட்பாளராக இந்நிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். பாரிவேந்தருக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பெரம்பலூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பெரம்பலூர் காமராஜர் வளைவு, அருகே சாலையில் திறந்த வேனில் பாரி வேந்தருடன் நின்றபடி அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.


அரியலூர் - நாமக்கல் ரயில் சேவை:


அண்ணாமலை பொதுமக்களிடையே பேசுகையில், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அவருக்கு கொடுத்த எம்.பி. நிதியை மக்களுக்கு முறையாக பயன்படுத்தியுள்ளார். மேலும் அவர் தொகுதியை சேர்ந்த 1,200 மாணவ-மாணவிகளுக்கு தனது கல்வி நிறுவனங்களில் இலவச உயர்கல்வி அளித்துள்ளார். மீண்டும் அவர் வெற்றி பெற்றால் தொகுதியை சேர்ந்த 500 குடும்பங்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரியலூரில் இருந்து பெரம்பலூர், துறையூர், தா.பேட்டை வழியாக நாமக்கல்லுக்கு ரெயில் போக்குவரத்து வசதி தொடங்குவதற்கு பாரிவேந்தர் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தார்.




பெரம்பலூர் வருகிறாரா பிரதமர்?


இதனால் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த ரெயில் போக்குவரத்து சேவை நிச்சயமாக தொடங்கப்படும். தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட தந்தை மகனுக்கு மாறி மாறி வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தேர்தலுக்கு தேர்தல் பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் திமுகவை நம்பாதீர்கள். தமிழகத்திற்கு பிரதமர் மோடியை அழைத்து வந்து கூட்டத்தை நடத்தியவர் பாரி வேந்தர்.


இதனால் பாரி வேந்தருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பெரம்பலூருக்கு வருகை தர வாய்ப்புள்ளது. அதற்கான நடவடிக்கை எடுகப்பட்டு வருகிறது. எனவே பாரி வேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என பேசினார். இந்த பிரச்சாரத்தின் போது ஐ.ஜே.கே மாநில தலைவர் ரவி பச்சமுத்து, பொது செயலாளர் ஜெயசீலன், பாஜக மாநில இணை பொருளாளர் சிவ சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.