திருச்சி மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், திருச்சியில் அதிமுக சார்பில் 3, மதிமுக 3,அமமுக சார்பில் 2, அண்ணா எம்ஜிஆர் திராவிட முன்னேற்றக் கழகம் 1, அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் 2, பகுஜன் சமாஜ் கட்சி 1, நாடாளும் மக்கள் கட்சி 1, நாம் தமிழர் கட்சி 5, சாமானிய மக்கள் நலக்கட்சி 1, சுயேச்சை 29 என மொத்தம் 48 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தோதல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமார் தலைமை வகித்தார். இதில், வேட்பு மனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள், வழக்குரைஞர்கள், வேட்பாளர்களின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த பிரதிநிதிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் ஒவ்வொரு வேட்பு மனுவாக எடுத்து அதனை அளித்த வேட்பாளர் மற்றும் அவர்களது சார்பில் வந்திருந்த பிரதிநிதிகள் மற்றும் வழக்குரைஞர்களிடம் ஆவணங்கள் குறித்தும், அதன் உண்மை தன்மை குறித்தும் விளக்கம் கோரப்பட்டது.
மேலும், யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்குமாறு கூறப்பட்டது. 48 மனுக்களும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்பட்டது. இதில், உரிய பரிந்துரை இல்லாமல் மனு தாக்கல் செய்திருந்த சுயேச்சை வேட்பாளரான கே.தனகோபாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
மேலும், அதிமுக வேட்பாளர் ப. கருப்பையா மனு ஏற்கப்பட்டதால் அவருக்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்ட விமான என்பவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதேபோல, அதிமுக, மதிமுக, அமமுக, அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பாளர்களது மனுக்கள் ஏற்கப்பட்டு, கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டிருந்த 8 வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதன்படி, மொத்தம் பெறப்பட்ட 48 மனுக்களில் 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 38 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வேட்பு மனுக்களை திரும்பப்பெற மார்ச் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்குள் யாரேனும் வாபஸ் பெற்றால் மீதமுள்ள மனுக்கள் இறுதி செய்யப்பட்டு தகுதியான வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் சனிக்கிழமை மாலை வெளியாகும் என கூறப்படுகிறது. அதிமுக வேட்பாளர் மனுவை நிராகரிக்க வலியுறுத்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனைக் கூட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பொன். முருகேசன், ஆட்சியரிடம் ஒரு கடிதம் அளித்தார். அதில், திருச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ப. கருப்பையா மீது கறம்பக்குடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கு குறித்த தகவல்களை மறைத்து வேட்பு மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும் புகார் தெரிவித்தார்.
மேலும், கறம்பக்குடி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகலையும் கொண்டு வந்திருந்தார். அந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மாவட்ட தோதல் நடத்தும் அலுவலருமான மா. பிரதீப்குமார், பரிசீலனையின்போது மனுவின் உண்மை தன்மைகள் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என தெரிவித்து அவரை அனுப்பி வைத்தார்.
மேலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதிமுக வேட்பாளர் மனுவை நிராகரிக்க வலியுறுத்தப்பட்டது. இதனால், மனுக்கள் மீதான பரிசீலனையின்போது சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பின்னர், அதிமுக வேட்பாளரின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக, தோதல் பிரிவு அலுவலர் கூறுகையில் அதிமுக வேட்பாளர் எந்த வழக்கிலும் குற்றவாளியாக இல்லை என தெரியவந்தால் அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.