பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத்  தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து கட்சி வேட்பாளர்களும் பல்வேறு வாக்குறுதிகளை முன் நிறுத்தி மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


தேர்தல் பிரச்சாரம்:


திருச்சி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் கருப்பையா செயல்வீரர் கூட்டம், வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் களத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மக்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனைகள் அதற்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பதை குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து மக்களை சந்தித்து வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார்.


இந்நிலையில் நேற்று திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி,  விஜயபாஸ்கர், முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.குமார், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன், உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.  




திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா செய்தியாளர்களிடம் பேசுகையில்.... 


புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, புரட்சி தமிழர் எடப்பாடி பழனிச்சாமி  ஆசிர்வாதத்துடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக ப.குமார் MP ஆக இருந்தபோது பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த 5  ஆண்டுகளில் எந்த வளர்ச்சி திட்டத்தையும் திருச்சியில் செயல்படுத்தவில்லை.


எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால், திருச்சி மக்களின் குரலாக  பாராளுமன்றத்தில் பிரதிபலிப்பேன் என்றார். திருச்சி தொகுதியை பொருத்தவரை சாலை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை, மேம்பாலம் போக்குவரத்து மேம்படுத்தப்படவில்லை, இரு வழி சாலைகள், நான்கு வழி சாலைகள் திட்டத்தில்  இந்தியாவிலேயே திருச்சி தொகுதி  பின்தங்கி உள்ளது. 




பாராளுமன்றத்தில் திருச்சி தொகுதி மக்கள் குரலாக பிரதிபலிப்பேன்


நான் திருச்சி தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவேரி-வைகையை இணைக்கும் குண்டாறு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். திருச்சி தொகுதி மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலித்து மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவேன் என தெரிவித்தார். திருச்சி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்மாதிரியான தொகுதியாக திருச்சியை மாற்ற நடவடிக்கை நிச்சயம் எடுப்பேன் என மக்கள் மத்தியில் வாக்குறுதிகள் கொடுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.