திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது, பூலோக வைகுண்டம் என்ற சிறப்புகளை கொண்டது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறுகிறது. இம்மாதம் 3 ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் முதல் நாள் இரவு 9 முதல் 9.30 மணி வரை அமுது செய்தலும், 10 மணி முதல் 10.30 மணி வரை திருவாராதனம், 10.30 முதல் 11 மணி வரை திருக்கொட்டாரத்தில் இருந்து சிறப்பலங்காரம், 11.30 வரை தீர்த்த கோஷ்டி நடைபெற்றது. 4 ஆம் தேதி முதல் பகல்பத்து திருமொழி திருநாள் தொடங்குகியது. தினமும் பல்வேறு அழங்காரங்கள் செய்து தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது,




தொடர்ந்து பகல்பத்து 10 நாட்களும் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் காட்சி அளிப்பார். பகல் பத்து உற்சவத்தையொட்டி இரவு 8.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. 13ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறார். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் என அழைக்கப்படும் பரமபதவாசல் வரும் 14ஆம் தேதியன்று அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்படும். அன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. 20ம் தேதி திருக்கைத்தல சேவையும், 21ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி விழாவும் நடைபெறும்.  23ஆம் தேதி தீர்த்தவாரி,  24ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும். விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பகல்பத்து, ராப்பத்து உற்சவங்கள் நடைபெறும் ஆயிரங்கால் மண்டபம் வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உள் மணல்வெளியில் பக்தர்கள் வசதிக்காக தகரபந்தல் அமைக்கப்பட்டுள்ளது.




 வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப்பதவி அளிப்பதாக கூறி நம்பெருமாள் அருளியதாக ஐதீகங்கள் கூறுகின்றன. அந்த தினமே வைகுண்ட ஏகாதசியாக பெருமாள் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. விஜயநகர பேரரசு காலத்தில் மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், தை முதல் பகுதியில் தை திருநாளும் வந்தது. இதை எப்படி  கொண்டாடுவது என கேள்வி வந்த போது, அப்போது  மணவாள மாமுனிகள் சொன்னபடி வைகுண்ட ஏகாதசி திருவிழா கார்த்திகையில் வந்தது. அதேபோல் 19 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கார்த்திகையில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது என்பது குறிப்பிடதக்கது. இதனை தொடர்ந்து14 ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு என்பதால் அன்று  ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தர்விட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையானது தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும் எனவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வரும் சனி கிழமை வேலை நாட்களாக அறிவிக்கபடுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.