திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியில் அரியாறு தலைப்பு தொடங்குகிறது. அங்கிருந்து தொடங்கி பொன்னணியாறு அணை பகுதியில் இருந்து மணப்பாறை, பள்ளிவெள்ளி மூக்குஒடை பகுதியில் இருந்து வரும் அரியாறு, அரியாவூர் வழியாக புங்கனூர், தீரன்நகர் வழியாக கோரையாற்றில் இணைந்து காவிரியில் கலக்கிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அரியாற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரியாற்றில் இருகரையை தொட்டு தண்ணீர் வந்தது. புங்கனூர்-தீரன்நகர் இடையே அரியாற்று நீர் கரைகளை கடந்து தண்ணீர் வெளியேறி ஊருக்குள் புகுந்தது. இதனால் இனியானூர் கிராமத்தில் அரியாற்று கரையோர பகுதியில் சுற்றியுள்ள குடியுருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதில் இனியானூர், பிராட்டியூர் மேற்கு பகுதியில் உள்ள முருகன் நகர், வர்மா நகர் தெற்கு ஆகிய பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்தது. திடீரென வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வந்தனர். 





இந்நிலையில் ஏற்கனவே புங்கனூர்-அல்லித்துறை இணைப்பு பாலப்பகுதியில் உள்ள அரியாற்றில் காரையோரத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மணல் மூட்டைகள் வைத்து அடுக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆலோசனையும் நடத்தினர். அதிகாரிகள் சென்ற சிறிது நேரத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்ட இடத்தில் உடைப்பு ஏற்பட்டு, வயல்களில் வெள்ளநீர் புகுந்தது. சுமார்  100 அடிவரை காரைகளை அரித்துச்செல்லப்பட்டது. இதனால் தொடர்ந்து தண்ணீர் வயல்களில் வெளியேறி வருவதால் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. இதில் பயிரிடப்பட்ட நெற்பயிற் உள்ளிட்ட பயிர்களும் தண்ணீரில் மூழ்கி நாசமானது, தண்ணீர் தீவு போல் காட்சி அளித்தது. மேலும் திருச்சி-திண்டுக்கல் சாலையில் பிராட்டியூர் முதல் தீரன்நகர் வரை சாலையை மூழ்கடித்து தண்ணீர் சென்று கொண்டிருந்தது இதன் காரணத்தினால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு இருந்தது.




திருச்சி மாநகரில் உய்யக்கொண்டான், கோரையாற்றிலும் அதிகளவு தண்ணீர் வந்ததால், வயலூர் சாலையில் சண்முகாநகர், குமரன்நகர், உறையூர் பகுதிகளில் மழைநீர் வீடுகளில் புகுந்துவிட்டது. சாலைகள் குளம் போல் மாறியது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வீடுகளை காலி செய்து சென்றனர். கடந்த சில நாட்களாக மழை பெய்யாத காரணத்தினால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடிய தொடங்கியது.பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் மீண்டும் மணப்பாறையில் இன்று காலை 6 மணி முதல் 9 மணிவரை அதிக கன மழைபெய்தது, அதாவது 27.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது. அதன் காரணமாக அரியாற்றில்  தண்ணீர் வரத்து அதிக அளவில் உள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தில் அரியாற்றின்  கரைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. இதனால் அரியாற்றின் கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்களது கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் வைத்திடுமாறும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.