டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் - ஏப்ரல் 14 தேதி அரசு விழாவாக மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களால் ஒவ்வோர் ஆண்டும் தன்னெழுச்சி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் வீ. கல்பனாதேவி, டாக்டர் அம்பேத்கர் அவர்களை பற்றிய சில தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார். 


”இந்திய நாட்டில் மாபெரும் சிந்தனையாளர் அம்பேத்கரைத் தவிர சாதிய பிரச்சனையைப் பற்றி ஆராய்ந்தவர் வேறு யாருமில்லை. சாதி அமைப்பு எந்த மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டதோ அந்த மதக் கோட்பாடுகளை அழித்தொழிக்காமல் சாதியை உடைப்பது சாத்தியமில்லை என்பதே அவரின் இறுதியான கருத்து. இந்தியாவில் சமுதாய சீர்திருத்தம் என்பது சொர்க்கத்திற்கு செல்லும் பாதையை போலவே கரடு முரடானது துன்பம் நிறைந்தது. மனித வாழ்வுக்கு எளிமையானது அல்ல என்று அவர் கூறியது முற்றிலும் உண்மையே.


இத்தகைய சூழலில் சாதியம் எவ்வாறு நவீனம் பெறும், மனித மேம்பாட்டிற்கு எவ்வாறு முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதை முன்னமே கணித்துள்ளார் இந்திய சமூகத்தின் சிற்பியாகக் கருதப்படும் பாபாசாகேப் அம்பேத்கர். அவரின் கருத்துக்களை பின்வரும் பத்திகளில் காணலாம். 


இந்தியாவில் நீங்கள் எந்த திசையில் சென்றாலும் சாதிக்கொடூரன் வந்து வழிமறிப்பான். இந்த சாதிக் கொடூரனை ஒழிக்காமல் அரசியல் சீர்திருத்தத்தையோ, பொருளாதார சீர்திருத்தத்தையோ, சமூக சீர்திருத்தத்தையோ அடையவே முடியாது என்பது அம்பேத்கரின் ஆணித்தரமான கருத்து. மேலும் இந்திய நாட்டில் நிலவுகின்ற முக்கியப் பிரச்சனையான வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் நேரடிக் காரணமாக இருப்பது 'சாதிய முறையே' என்றார். ஏனென்றால் பரம்பரை தொழில் அல்லாத வேறு எந்த தொழிலுக்கும் ஆட்கள் தேவைப்படும் போது கூட சில சாதிய அமைப்பு அதற்கு அனுமதிப்பதில்லை. இதனால் சமூகத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகுகின்றது என்பதை அண்ணல் அன்றே கணித்துச் சொன்னார்.




மேலும் தன் கருத்துப்படி சமூகம் இருக்க வேண்டும் என்று ஒருவன் விரும்பலாம். அது சாத்தியம் ஆகாத போது தன் கருத்துக்களை முற்றிலுமாக கைவிட்டு சரணாகதி அடைந்தாவது சமூக உறவை தக்க வைத்துக் கொள்ள அவன் தயாராக இருப்பான். ஏனெனில் சமூகத்தில் இருந்து தனித்து வாழ முடியாது. மனிதனின் இந்த இயலாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள சாதி எப்போதும் தயாராக இருக்கிறது. சொல்லாலும் செயலாலும் சாதியச் சட்டங்களை முற்றிலும் ஏற்றுக் கொண்டு ஆக வேண்டும் என அது வற்புறுத்துகிறது.


எனவே சாதி சீர்திருத்தத்தை முடக்கும் அல்லது அழிக்கும் கருவியாகவே உள்ளது. நல்ல இயல்புகளை சாதி அடக்கி விடுகிறது. பொது ஒழுக்கம் என்பதாக அல்லாமல் இங்கு சாதி ஒழுக்கமே மேலோங்கி இருக்கிறது. இரக்கத்துக்கு உரியவர்களுக்கு இரக்கம் காட்டவேண்டும் என்ற உயரிய எண்ணம் சாதியில் இல்லை. தகுதியானவர்களைப் பாராட்டுவதுமில்லை. தேவையுள்ளவர்களுக்குக் கொடுப்பதும் இல்லை.


இதனால் துன்பத்தில் வருந்துவோரை எவரும் திரும்பிப் பார்ப்பதும் கூட இல்லை. தர்ம உணர்ச்சி இருக்கிறது. ஆனால் அது தம் சுயசாதியினரோடு தொடங்கி தம் சாதியினரோடே முடிந்து விடுகிறது. இரக்க உணர்ச்சி இருக்கிறது, ஆனால் அது மற்ற சாதி மனிதர்களிடம் காட்டப்படுவதில்லை. மதம், சமுதாய அந்தஸ்து, சொத்து ஆகியவையெல்லாம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்துக்கும் ஆதிக்கத்திற்குமான அடிப்படைகள் ஆகும். இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் மேலோங்கி மற்றவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. வலிமையுள்ள ஒருவர் வலிமையற்றவர் மேல் செலுத்தும் ஆதிக்கம் மட்டுமே இந்த அடிப்படைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.




சுதந்திரம் என்பது குறிக்கோள் என்றால் ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மீது கொண்டிருக்கிற ஆளுகையை அழிப்பதே அரசியல் சுதந்திரம் மட்டுமே முழுமையான விடுதலையைப் பெற்றுத்தரவியலாது. அதைப்போலவே, பொருளாதார சீர்திருத்தம் மட்டுமே நாம் மேற்கொள்ள வேண்டிய ஒரே சீர்திருத்தம் என்று வலியுறுத்தவும் முடியாது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் அதிகாரத்துக்கும் ஆதிக்கத்திற்குமான அடிப்படைகளாக சமுதாயமும் மதமும் இருந்தால் அங்கு நாம் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் சமுதாய சீர்திருத்தமும், மதச் சீர்திருத்தமுமே ஆகும்.


மேலும் அம்பேத்கர் கூறுகையில் சாதி அமைப்பு தொழில்களை மட்டும் பிரிப்பதில்லை. தொழிலாளர்களையுமே அது பிரித்து விடுகிறது என்கிறார். தொழிலை பிரிப்பது என்பது வேறு, தொழிலாளர்களை பிரிப்பது என்பது வேறு. சாதி அமைப்பானது தொழிலாளிகளை வெறுமனே பிரிக்கிற அமைப்பு மட்டுமல்ல. அவ்வாறு பிரிக்கப்பட்ட தொழிலாளிகளை மேல்', 'கீழ்' என்று ஏற்றத்தாழ்வான படிநிலையில் வகைப்படுத்தும் அவசியமற்ற வேலையையும் செய்கிறது.




 உட்சாதிகளின் பெருக்கம் என்பதும், சாதிய ரீதியில் அணியமாவது என்பதும் நாம் காணவிரும்பும் சாதியற்ற சமூகத்தை உருவாக்காது. சாதியுள்ள அநீதியான சமூகத்தில் பிறந்துவிட்டோம். அதை அப்படியே விடக்கூடாது. மாற்றியே தீரவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சாதியற்ற சமூகம் படைக்க சாதியினை இழிவு செய்தும், சாதியைப் பாதுகாக்கும் அனைத்து ஏற்பாடுகளையும் அடையாளங்கண்டு ஒதுக்கிவிட ஆவண செய்வதுமே நமக்கு முன்னால் உள்ள சவால்களாகும்.


அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று இதற்காக சூளுரைப்பது நம் மேல் உள்ள வரலாற்றுக் கடமையாகும். சாதியுள்ள சமூகத்தின் மீதே விஷக்காற்று வீசட்டும் என்றிருக்கும் நிலையில் உட்சாதி சமூகம் அமைவதும், நவீன சாதியம் என்பது உருவாவதும் தொடக்கத்திலேயே நசுக்கப்பட வேண்டியதும், ஒழிக்கப்படவேண்டியதுமே ஆகும்.