மத்திய அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, இறுதி நேர்முக தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 71506 பேருக்கு இன்று இந்தியா முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பணி ஆணை வழங்கும் 4வது ரோஸ்கர் மேளா விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக  உரையாற்றி பணி ஆணைகளை வழங்கினார். அதன் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற பணி ஆணை வழங்கும் ரோஸ்கர் மேளா விழா  ரயில் மஹாலில் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அஜய் பட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திருச்சியில் நடைபெற்ற விழாவில் 243 பேருக்கான பணி நியமன ஆணை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ரயில்வே துறை, அஞ்சல் துறை, உயர்கல்வி உள்ளிட்ட துறைகளில் உள்ள பல்வேறு பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மத்திய அமைச்சர் அஜய் பட் பணி ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் SRMU துணை பொதுச்செயலாளர் வீரசேகரன், பல்வேறு ஒன்றிய அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள், உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.




முன்னதாக ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில்  மத்திய பாதுகாப்பு துறை மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் திரு அஜய்பட்   சுவாமி தரிசனம் செய்தார்.   கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து வரவேற்று கோயில் பிரசாதங்களை வழங்கினார். உடன் உள்துறை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் , உதவி கண்காணிப்பாளர் மோகன், நிலப்பிரிவு கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் , திருச்சி சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி கலந்துக்கொண்டனர்.




மேலும் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த  மத்திய இணை அமைச்சர் அஜய் பட் பேசுகையில், “மத்திய அரசு தொடர்ந்து வேலை வழங்கும் பணியை செய்து வருகிறது. இளைஞர்களுக்கு தொழில் முனையும் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஸ்டார்ட் அப்களும் தொடர்ந்து தொடர்கின்றன. ஒரு காலத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை மட்டுமே நமது இளைஞர்கள் நம்பி இருந்த நிலையில் தற்போது இந்தியாவிலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறோம். ஒரு காலத்தில் மற்ற நாடுகளை நம்பி இருந்த நிலையில் தற்போது இந்தியாவை மற்ற நாடுகள் நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் பட்டியலில் இந்தியா, 25வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. இது சுய சார்பு இந்தியா என்பதற்கான வலிமை சேர்க்கிறது. ரஷ்யா- உக்ரேன் போர் காரணமாக உலக அளவில் பொருளாதாரம். சீர்குலைவை சந்தித்தது. ஆனால் அதையும் தாண்டி, இந்திய பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையில் பிரதமர் மோடி வைத்துள்ளார்” என்று கூறினார்.