இந்தியாவில் 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் தண்டி யாத்திரை நடத்தப்பட்டு உப்பு எடுக்கிற போராட்டம் நடைபெற்றது. இதுவே இந்திய விடுதலையின் தொடக்கமாக இருந்தது. அதே போல், அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் திருச்சியில் இருந்து நடைபயணம் மேற்கொண்டு வேதாரண்யத்தில் உப்பு எடுக்கிற சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்கள் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு பெருமையுடன் சான்றுகளாக இன்றளவும் உள்ளன. இந்த நிலையில், மூதறிஞர் ராஜாஜி தலைமையில் அன்று நடந்த வேதாரண்ய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை மீண்டும் நினைவு கூறுகிற வகையில், திருச்சியில் இருந்து வேதாரண்யம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை  திருச்சி ஜங்‌ஷன், திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தியாகி டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்களது இல்லத்தில் இருந்து வேதாரண்ய உப்பு சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை தொடக்க விழாவை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.




இந்த நிகழ்ச்சியில் வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், நீதிமன்றங்களில் வாதாட கூடாது, அந்நியத் துணிகள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம் என நாட்டின் விடுதலைக்கு தேவைப்பட்டது. வெள்ளையர்களை விட கொடியவர்களான மோடியையும், அமித்ஷாவையும் தூக்கி எறிவதற்கு இந்தகைய  நடைபயணம் அவசியம். வெள்ளைக்காரர்கள் நாகரிகமானவர்கள், அதனால் அவர்களை எதிர்த்து அகிம்சை வழியில் போராடினோம். காங்கிரஸ்காரர்கள் ஆயுதம் ஏந்த மாட்டார்கள். பாஜக ஆட்சி தொடர்ந்தால் மாநிலங்கள் தனித்தனி நாடுகளாக மாறும் அபாயம் உள்ளது. நாட்டில் உள்ள மொழி, உணவு, உடை வேறுபாடுகளை வைத்து பாஜக அரசு அரசியல் செய்கிறது. இதில் பன்முகப்பட்ட பண்பாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும். அதற்கு ஆயுதம் எடுக்க வேண்டும் என்று சொன்னாலும்,  அதனை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றார்.




தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,  உப்பு சத்தியாகிரக நடைபயணத்தை பற்றி பலருக்கு தெரியாது. தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த நடைபயணம் அமையும். உப்பு என்பது ஒரு அடையாளம் தான். இன்றைக்கு அதற்கு இணையாக மொழி, உணவு, உடை, கலாச்சாரம் போன்றவை அடையாளமாக உள்ளன. சுதந்திரம் பறிபோகும் போது இந்த உரிமைகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தலையிடுகிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் தருவதல்ல உரிமை. உரிமைகள் எது என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். சுதந்திரம் நாள்தோறும் இந்த நாட்டில் பறிபோகிறது. இது நீடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய அனைத்து சுதந்திரங்களும் பறிபோய் விடும். பேச்சு, எழுத்து, கட்டுரை, சுட்டுரை இவையணைத்தும் ஆயுதங்கள். அந்த ஆயுதங்களை கையில் ஏந்த வேண்டும் என்று தான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சொன்னார் என நம்புகிறேன். மேலும் இந்த நட பயணம் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னோட்டம் என்று வைத்துக்கொள்ளலாம் என குறிபிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, மற்றும் மூத்த தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மேலும் நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் காங்கிரங் கட்சி தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.