பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அரியலூர்-பெரம்பலூர் நெடுஞ்சாலை அருகே எழுந்தருளி உள்ள மருதையான் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 1981-ஆம் ஆண்டு முதன் முதலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடைசியாக 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு மருதையான் கோயில் மற்றும் வலம்புரி விநாயகர், பூர்ணபுஷ்கலாம்பிகா சமேத ஹரிஹரபுத்திர சுவாமி, பொன்னியம்மன், பாப்பாத்தி அம்மன், கெங்கை கருப்பு, ஆகாச கருப்பு, கோட்டைமுனி, காசிமுனி, செம்மலை ஆண்டவர் ஆகிய கோயில்களின் விமானங்கள் கிராம மக்கள் மற்றும் குடிமக்களின் முயற்சியால் திருப்பணி செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 14-ஆம் தேதி காலை மங்கள இசை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், தீபாராதனையும், அன்று மாலை விக்னேஸ்வர பூஜை, யஜமான சங்கல்ப்பம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், ஆலயபிரதர்சனம், யாகசாலை பிரவேசம், துவார பூஜை, வேதிகா அர்ச்சனை, திரவியாஹூதி. பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
மேலும் 15-ஆம் தேதி காலை இரண்டாம் கால பூஜை, விக்னேஸ்வர பூஜை, புன்யாஹ வாசனம், பஞ்சகவ்யம், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, விஷேச சந்தி, யாகசாலை பிரவேசம், சூர்ய பூஜை, துவார பூஜை, வேதிகா அர்ச்சனை வேதபாராயணம், பஞ்சாக்கினி, ஜெப்பாராயணம், தேவாரம், திருவாசகம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மதியம் பரிவார தேவதைகள், வலம்புரி விநாயகர், அய்யனார் சுவாமி, மருதைவீரன், பொன்னியம்மன், பாப்பாத்தி அம்மன், கருப்புசாமி, செம்மலையப்பா ஆகிய சுவாமிகளுக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.
அன்று இரவு விக்னேஸ்வர பூஜை, புன்யாஹ வாசனம், பாலிகை பூஜை, துவார பூஜை, வேதிகா அர்ச்சனை, வேதபாராயணம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, ரக்ஷா பந்தனம், நாடிசந்தானம், ஸ்பரிஸாஹூதி, துவார பூஜை, வேதிகா அர்ச்சனை, வேதபாராயணம், பூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாத்ரா தானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னர் வலம்புரி விநாயகர் கோயில் விமான மூலஸ்தானம், அய்யனார் கோயில், மருதையான் கோயில், செம்மலையப்பா, பொன்னியம்மன், பாப்பாத்தி அம்மன், கருப்புசாமி கோயில்களின் விமான மூலஸ்தான கும்பாபிஷேகம் வாண வேடிக்கை முழங்க ஒரே நேரத்தில் நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தச தரிசனம் ஆகியவை நடைபெற்றன. இரவு வாண வேடிக்கையுடன் சாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவில் சேலம், ஆத்தூர், பெரம்பலூர், அரியலூர், வரகூர், கடலூர் ஆகிய இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட குன்னம் காவல்துறையினர் ஈடுபட்டனர்.