அரியலூர் மாவட்டம் தா.பழூர் முதல்நிலை ஊராட்சியின் 8-வது வார்டு பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை எனவும், மேலும் இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் குடிநீர் பிரச்சினையை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அப்பகுதி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
இதையொட்டி தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் இருந்து 8-வது வார்டு பொதுமக்கள் கையில் காலிக்குடங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் இணைந்து ஒன்றிய அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில், குடிநீர் வழங்க கோரிக்கை விடுத்து ஒன்றிய அலுவலக வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல், மாவட்ட குழு உறுப்பினர் செந்தில்வேல் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென ஒன்றிய அலுவலக வளாக முன்கதவை திறந்து கொண்டு காவல்துறையை மீறி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் புகுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையில் ஒரு காவல்துறையினர் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால், திடீரென ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்களை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. போராட்டக்காரர்களை மீண்டும் ஒன்றிய அலுவலக முகப்புப் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் தங்களுக்கு எப்போது குடிநீர் கொடுக்கப்படும் என்பது குறித்து ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் தங்களோடு பேசி தகுந்த பதிலை தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கு ஊராட்சி தலைவர் கதிர்வேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதற்கிடையே வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சிகள்) ஜெயராஜ் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக ஒன்றிய அலுவலகத்திற்கு திரும்பினார். மேலும் 8-வது வார்டு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், அப்பகுதி மக்களுக்கு தற்காலிக தீர்வாக டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்களிடம் அவர் தெரிவித்தார். அப்பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ் மற்றும் குணசேகரன் ஆகியோர் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.