தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி விரைவில்  அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 12ஆம் தேதி தேர்தல் நடைபெறலாம் என்ற நிலையில் பதவிகளை பெறுவதில் ஆளுங்கட்சியான திமுகவினர் தீவிரமாக உள்ளனர். அதேசமயம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கடந்த உள்ளாட்சி சட்டசபை  தேர்தல்களில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அதிமுகவினரும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் திருச்சி மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் சீட் பெற திமுகவை போன்று அதிமுகவினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் பேசியபோது கடந்த 8 மாத ஆட்சியில் திமுக செய்துள்ள தவறுகளையும், செய்யத் தவறிய வாக்குறுதிகளையும், அதனால் திமுக மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியையும், வைத்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டு உள்ளோம் என்றனர். திருச்சி மாநகராட்சி மேயர் பதவி இப்போது பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால் இப்போதைய நிலவரப்படி அமமுகாவில்  மாவட்ட செயலராக இருந்து சட்டசபை தேர்தலின் போது அதிமுகவுக்கு திரும்பிய மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், அதிமுகவின் மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமான சீனிவாசன் மேயர் வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார், கட்சியினரிடையே அறிமுகம் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இவர் மேயர் வேட்பாளர் எதிர்பார்ப்பில் இருக்கிறார்.





இதனை தொடர்ந்து கட்சியின் மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளரும், ஆவின் தலைவருமான கார்த்திகேயன் எம்.எல்.ஏ வாய்ப்பை எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் நகர்புற உள்ளாட்சி மேயர் வேட்பாளர் கனவில் இருக்கிறார். எனிலும் வார்டுகளுக்கு தன் தம்பி பெயரில் விருப்ப மனு அளித்திருக்கிறார். பெண்களை பொறுத்தவரை மாவட்ட இணைச் செயலாளராக ஜாக்குலின் ஏற்கனவே மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளதால் இந்த முறை வெற்றி பெற்று மேயராகும் வாய்ப்பை பெறலாம் என எதிர்பார்க்கிறார். அதோடு கட்சியில் இணைந்து சிறிது காலத்திலேயே மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளராக பொறுப்பு வாங்கிய நஷீமா பாரிக் சமீபத்திய  வரவாக இருக்கும் இவர் மேயர் கனவில் இருக்கிறாராம் என்றனர். மேயர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால் ஆண்களை தாண்டி பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இவர்களோடு மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவஹர்லால் நேரு கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாவிட்டாலும் மேயர் கனவில் இருந்து வருகிறார். அதற்காகவே தனது ஆதரவாளர்கள் பலர் தனக்கு விருப்பமனுவை  செய்ய வைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து அதிமுக திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பா.குமார் அவரும் இந்த மேயர் சீட் பெறுவதில் முயற்சித்து வருகிறார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தனர்.


 



வெல்லமண்டி நடராஜன் - ஜவஹர்லால் நேரு


மேலும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் ஸ்ரீரங்கம் பகுதியிலும் சிலருக்கு மாநகராட்சி மேயர் பதவி மீது கண் இருந்தாலும், திருச்சி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளையும் இழந்துள்ளதாலும்  மாநகராட்சி சார்ந்த துறையின் அமைச்சரான நேரு திருச்சியை சேர்ந்தவர் என்பதாலும் அமமுக தனியாக களத்தில் இருப்பதாலும் அனைவரும் தயக்கத்தில் இருக்கிறார்கள் என அதிமுக வட்டாராங்கள் தகவல் தெரிவித்தனர். எனிலும் மேயர் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் இருப்பவர்கள் மேயர் வெற்றி வாய்ப்பு இல்லாவிட்டாலும் மேயர் வேட்பாளராக இருந்தால் தான் மாநகராட்சியில் அதிகாரமிக்க எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடிக்க முடியும் என்பதற்காக ஆர்வம் காட்டுகின்றனர். அதேசமயம் தேர்தல் செலவு அதன் பின்னர் மேயர் தேர்தலுக்கு ,கவுன்சிலர்களுக்கு, செய்ய வேண்டிய செலவு என்று வரும் போது அனைவரும் யோசிக்கின்றனர்  என வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.