திருச்சி புத்துர், வயலூர் சாலையில் உள்ள  பிஷப் ஹீபர் கல்லூரியில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற 57 பேர்களுக்கு தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


வேலைவாய்ப்பு முகாம்:


உடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேசியது.. திருச்சி மாவட்டத்தில் இந்தாண்டு 4 சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடபட்டுள்ளது. அதில் முதல் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.


மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துக்கொண்டனர். இதில் 8,000 பேர்கள் முகாமில் பங்கேற்றனர், இதில் 500 பேர்கள் மட்டுமே பணி நியமன ஆணையை பெற்றுகொண்டனர். ஆனால் இந்தாண்டு நடைபெற்ற முகாமில் 190 தனியார் நிறுவனங்கள் கலந்துக்கொண்டனர், இதில்  2,500 பேர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். குறிப்பாக கடந்தாண்டை ஒப்பிடும் போது முகாமில் கலந்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. 




திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் வருபவர்கள் அரசு வேலை வேண்டும், அதுவும் குறைவான சம்பவளமாக இருந்தாலும், உள்ளூரில் வேண்டும் என கூறுகிறார்கள். அனைவருக்கும் அரசு வேலை அளிப்பது கடினம், ஆகையால் தான் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலை வாய்ப்புகள் முகாம் நடத்தபட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு அரசு வேலை வேண்டும் என்றால் அவர்களின் திறன்களை நன்றாக வளர்த்துகொள்ள வேண்டும்.


கடந்தாண்டு நடைபெற்ற முகாமில் 25,000 காலி பணி இடங்கள் இருந்தாலும் வெறும் 500 பேர்கள் மட்டுமே தெர்வானார்கள். இதுக்குறித்து தனியார் நிறுவனங்கள் கூறும்போது மாணவர்களின் திறன், சிந்தனை ஆற்றல் குறைவாக உள்ளது, ஆகையால் தான் திறனை கொண்ட மாணவர்களை தேர்வு செய்துள்ளோம் என தெரிவித்தனர். ஆகையால் மாணவர்கள் தங்களுடைய எதிர்காலம், சூழ்நிலை, வாழ்கை முறை, வேலை என அனைத்தையும் திட்டமிட்டு அதை நோக்கி பயணம் செய்ய வேண்டும். மேலும் உங்களுக்கு விருப்பமான வேலையை தேர்வு செய்தால் அதில் நீங்கள் நிச்சியம் வெற்றியடைய முடியும். அடுத்து வரும் தலைமுறைக்கு நீங்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.




அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியாது:


இதனை தொடர்ந்து மேடையில் பேசிய தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு "நான் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக 2 ஆண்டுகலாமக பணியாற்றியுள்ளேன். அந்த காலகட்டத்தில் 50 லட்சம் பேர் வேலை வாய்ப்புகளுக்காக பதிவு செய்து இருந்தனர். ஆனால் இந்த காலகட்டத்தில் 1 கோடி பேர் பதிவு செய்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியாது. ஏனென்றால் அரசு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையே 15 லட்சம் பேர்கள் தான். ஆனால் இன்று அனைவரும் அரசு வேலை வேண்டும் அதுவும் உள்ளூரில் வேண்டும், குறைவான சம்பளமாக இருந்தாலும் பரவாயில்லை என கூறுகிறார்கள்.


திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அனைவருக்கும் வேலை தரக்கூடிய அடிப்படை வசதிகள் இல்லை. ஆகையால் தான் பெரிய நிறுவனங்கள் பெரிய நகரங்களை தேடி செல்கிறார்கள். ஆகையால் பஞ்சப்பூரில் புதிதாக 600 கோடி செலவில் அதிக வேலை வாய்ப்புகள் வழங்கும் விதமாக நிறுவனம் கட்டபட உள்ளது. மேலும் திமுக அரசு தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கண்டிப்பாக வழங்கபடும்.


விரைவில் நல்ல முடிவு:


மேலும் 5 ஆண்டுகள் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது 60 ஆயிரம் பேருகளுக்கு வேலை வழங்கினேன். தற்போது நகராட்சி துறையில் உள்ளேன், இங்கு 45 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சில வேலைகளை தனியார் மயமாக மாற்றியதால் என்ன செய்வது என்று யோசனை செய்து வருகிறோம். மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வரிடம் ஆலோசனை செய்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.


கல்லூரிகளில் நன்றாக படித்த மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு வேலை வழங்கப்படும். குறிப்பாக  அந்த அந்த மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு உள்ளூரில் பணி புரியும் வாய்ப்புகள் கண்டிப்பாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தேர்வு முறையாக நேர்முகம், எழுத்து தேர்வு என விதிமுறைகளை பின்பற்றி நடைபெறும். இந்த திட்டத்தை நீதிமன்றம் சென்று யாரும் தடை செய்ய முடியாத அளவிற்கு தெளிவாக நடைமுறைபடுத்த ஆலோசனை மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்தார்.