திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற சிறுவர்களுக்கு கல்வி சேவைகள் வழங்கி வருகிறது. ஆசிரமத்தில் துவக்கப்பள்ளியும், உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இதில் 250 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்களுக்கு உணவு, உடை மற்றும் இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தரும் பாதுகாவலராக மடத்தை நிர்வகிக்கும் நான்கு பேர் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் 3 மாணவர்கள் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சமூக நலத்துறை அதிகாரி நித்யா தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது அங்குள்ள மாணவர்களுக்கு பாதுகாவலர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலையத்தில் அதிகாரிகள் புகார் அளித்தனர்.
மேலும் இந்த புகாரின் பேரில் ராமகிருஷ்ண தபோவனத்தில் உள்ள பிரம்மச்சாரிகள் தனசேகர், பார்த்திபன், பாதுகாவலர்கள் சிவகிரி, ஜேசுராஜ் ஆகிய நான்கு பேர் மீது பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.