நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய, மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் களமிறங்கியது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பை எதிர்கொள்ள நாடு முழுவதும் ஒத்திகை பயிற்சி நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்தது. நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களின் பொது, தனியார் சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில்  கடந்த இரண்டு நாட்களாக mock drill எனப்படும் ஒத்திகை பயிற்சி நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. மேலும் பொதுமக்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கொரோனா பரவலை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. அரசு மருத்துவமனை டீன் நேரு தலைமையில் செயல்படும் இந்த மையத்தில் தற்போது 42 படுக்கைகள் உள்ளது.




மேலும் தற்போது, திருச்சி மாநகராட்சிக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அந்த சிகிச்சை மையத்திற்கு உள்ளேயே ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதுமான மருந்துகளும் கையிருப்பு உள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்றை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை. அதை எதிர்கொள்ள, திருச்சி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் 7 கர்ப்பிணிகள் உள்பட 9 பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டீன் டாக்டர் நேரு கூறினார். மேலும் திருச்சி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கூடிகொண்டே இருக்கிறது.  நேற்று ஒரேநாளில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவமனையில் 59 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை மொத்தம்  98,489 தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர். 97,268 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1162 பேர் இறந்துள்ளனர். ஆகையால்  கொரோனா தொற்று பரவுவதை தொடர்ந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.