திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாநகராட்சியின் மொத்த பணிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை மேற்கொள்ள தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.14 ஆயிரம் மற்றும் அகவிலைப்படி உயர்த்தி வழங்குவது. திருச்சி மாநகராட்சியில் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட 65 வார்டு பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வார்டுக்கு தலா 25 வீதம் 5 மண்டலங்களுக்கும் மொத்தம் ஆயிரத்து 625 எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்துவது.  இதனை தொடர்ந்து  சலூன் கடை, பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர், ஸ்பா தவிர்த்து சலவைத் தொழில், கற்பூரம் காய்ச்சுதல், தோல் பதனிடும் தொழில், மீன் எண்ணெய் செய்தல், செங்கல் காளவாய், சுண்ணாம்பு காளவாய், சுருட்டு தயாரித்தல், பீடி தயாரித்தல், டீ, காபி ஆகியவற்றை கேன் மூலம் விற்பனை செய்தல், வியாபார நோக்கில் செயல்படும் தங்கும் விடுதிகள், மதுபான கடையில் வைத்திருக்கும் பலகாரம், இட்லி, தோசை கடை, மிட்டாய் கடை, குளிர்பானம் விற்பனை கடை, சைக்கிள் விற்பனை கடை, மருந்தகங்கள், தையல் கடைகள், சாக்கு பை மண்டிகள், பரிசோதனை நிலையங்கள் உள்ளிட்ட 126 தொழில்களுக்கான உரிமையாணை (லைசென்ஸ்) கட்டணங்கள் திருத்தப்பட்டு தற்போது உயர்த்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.




முன்னதாக கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக எழுந்து தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். 17-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்களை நியமித்து அங்கேயே பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 49-வது வார்டில் ஸ்ட்ரைக் கிங் போர்ஸ் தூய்மை பணியாளர்கள் நியமனம் குறித்து மாறுபட்ட கருத்தினை பதிவு செய்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் 47-வது வார்டு பகுதியில் அதிகாலை 5½ மணிக்கு சாலைகளில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்த தூய்மை பணியாளர்களை கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலில் வீடுகளில் இருக்கும் குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 39-வது வார்டுக்குட்பட்ட மாநகராட்சி பகுதியில் பன்றிகள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த பன்றிகளை சுட்டுப் பிடிக்க உத்தரவிட வேண்டும். 10-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை பணிகளால் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த மேயர் அன்பழகன் உங்கள் பகுதியில் நான் கூட வந்து பார்த்தேன். தவறான தகவல் சொல்லக்கூடாது. தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்று எப்படி சொல்கிறீர்கள் என ஆவேசமடைந்தார். 




60-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் காஜாமலை விஜய் பாதாள சாக்கடை பணியில் பதிக்கப்படும் குழாய்களை எடுத்து வந்து இந்த குழாயின் அகலம் குறைவாக உள்ளது. அகலம் பெரியதாக உள்ள குழாயை பதிக்க வேண்டும் என்று பேச தொடங்கினார். அப்போது மற்ற கவுன்சிலர் அவருக்கு தொடர்ந்து இடையூறு செய்தனர். இதனால் ஆவேசம் அடைந்த காஜாமலை விஜய் ,மாதத்தில் ஒரு முறை நடக்கும் கூட்டத்தில் எனது வார்டு பிரச்சினைகளை முழுமையாக கூற முடியவில்லை என்ற கூறி. கவுன்சிலர்களை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.