மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக முதல்வர் செயல்படுகிறார் - உதயநிதி ஸ்டாலின்

கட்சியின் மூத்த முன்னோடிகளை நான் பெரியாராக, அண்ணாவாக, கருணாநிதியாக பார்த்து மகிழ்கின்றேன். கட்சி வெற்றி என்பது உங்களால் தான் சாத்தியமானது.- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Continues below advertisement

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள தியாகேசர் ஆலை பள்ளி மைதானத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மணப்பாறை கலை அறிவியல் கல்லூரி அமைத்திட உத்தரவிட்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், ஒன்றிய தி.மு.க. சார்பில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு மற்றும் மணப்பாறை ஒன்றிய தி.மு.க. அலுவலக அடிக்கல் நாட்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் ராயம்பட்டி ராமசாமி அனைவரையும் வரவேற்றார். இதனை தொடர்ந்து விழாவில் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது.. 

Continues below advertisement


தேர்தல் நேரத்திலே மணப்பாறை தொகுதிக்கு அரசு கலை, அறிவியல் கல்லூரி வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருந்தது. தேர்தலில் வென்ற பின்னர் முதலமைச்சர் தற்போது மணப்பாறைக்கு அரசு கலை, அறிவியல் கல்லூரி கொடுத்துள்ளார். ஆகவே அந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு உங்கள் முன்னால் நின்று பேசுகிறேன். இங்கு வந்திருக்கும் கட்சியின் மூத்த முன்னோடிகளை நான் பெரியாராக, அண்ணாவாக, கருணாநிதியாக பார்த்து மகிழ்கின்றேன். கட்சி வெற்றி என்பது உங்களால் தான் சாத்தியமானது. ஆகவே இந்த நேரத்தில் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 5-வது ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகவே அமைந்திருக்கின்றது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல், அதன்பின் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் இப்படி அனைத்திலும் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக, அனைவரும் பாராட்டும் படியான முதலமைச்சராக நம் முதலமைச்சர் உழைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவருடன் அமைச்சர்களும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கின்றனர். மணப்பாறை ஒன்றிய தி.மு.க. அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். இதை ஒரு முன்மாதிரியாக வைத்துக் கொண்டு தமிழகம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் தி.மு.க. அலுவலகம் அமைக்க வேண்டும் என்றார். மேலும்  விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, மெய்யநாதன், மணப்பாறை ஒன்றிய குழு தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி, வக்கீல் கிருஷ்ணகோபால், நகர அவைத்தலைவர் ஜான் பிரிட்டோ, மாவட்ட பிரதிநிதி பால்பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் மு.ம.செல்வம் நன்றி கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement