திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் பகுதியில் 24 மணி நேரமும் கஞ்சா, மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன. இதை அருந்தும் போதை வாலிபர்கள்  அப்பகுதி வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் ரகளையில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்சி மேலப்புதூர் பகுதியில் பள்ளிகள் அதிகம் உள்ளன. இப்பள்ளிகளுக்கு காலையில் வரும் சிறுமிகளை வழிமறித்து கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபடும் சம்பவம் அடிக்கடி நடப்பதாக பகுதி மக்களிடையே புகார் எழுந்துள்ளது. மேலும் பல முறை இது தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மிகவும் அச்சமாக ஒரு சூழ்நிலையில் தான் அனுப்புகிறோம் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறை அதிகாரிகள் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.




மேலும் பாலக்கரை வேர்ஹவுஸ் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இதன் அருகே ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் சிறிய கட்டிடம் உள்ளது. இங்கு 24 மணி நேரமும் டாஸ்மாக் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதை வாங்கி அங்கேயே அமர்ந்து குடிப்பவர்கள் அதிகம். மேலும் தண்டவாளத்தின் அருகே உள்ள பகுதியில் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதை வாங்கும் சிறுவர்கள் பலர் கஞ்சாவை அங்கேயே சுவைக்கின்றன சிறிது நேரத்தில் போதை ஏறியதும் அந்த வழியாக  செல்லும் பள்ளி மாணவிகளிடம் ரகளையில் ஈடுபடும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இங்கு கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை நடப்பது இப்பகுதியில் காவல்துறையினருக்கும் நன்றாகவே தெரியும் ஆனால் ஒரு சில நேரங்களில் நிர்ணயிக்கப்பட்ட நேரம் கடந்த பிறகு வரும் காவல் துறையினரை சீறுடையில் வந்தே கள்ளசந்தையில் விற்கும் மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் சம்பவங்களும் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.




இது ஒருபுறமிருக்க இதே பகுதியில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கேரளா லாட்டரி விற்பனையும் சக்கை போடு போடுகிறது. தடை செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் இங்கு ஒரு காலத்தில் இலைமறை காயாக விற்பனை செய்யப்பட்டு வந்தன ஆனால் கடந்த 1 ஆண்டுகளாக வெளிப்படையாகவே விற்பனை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ரவுடிகள் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் தினமும் தவியாய் தவித்து வருகின்றனர். மேலும் பெண்கள் ,சிறு குழந்தைகளை வீட்டில் இருந்து வெளிய அனுப்புவதற்கு மிகவும் அச்சத்துடன் தான் அனுப்புகிறோம். குறிப்பாக  இரவு நேரங்களில் நிம்மதியாக உறக்கம் என்பதே எங்களுக்கு கிடையாது இதற்கு அரசாங்கமும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கோரிக்கையை நாங்கள் பதிவு செய்கிறோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.