திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் அரசு அறிவித்த தளர்வுகளை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மக்கள் கோயில்கள், கடை வீதிகளில், அதிகளவில் கூட்டமாக இருப்பதை காணமுடிகிறது. அதே சமயம் பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணிவது இல்லை என்பது வேதனை தருவதாக உள்ளது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது என திருச்சி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை பாதித்தவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 862 பேர்களும், குணமடைந்தோர் 71 ஆயிரத்து 157 பேர்களும், சிகிச்சை பெற்று வருபவர்கள் 735 பேர்களும், இறந்தவர்கள் 970 பேர்களுமாக உள்ளது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 433 பேர் புதிதாக பாதிக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு வணிக வளாகங்கள், சிறிய, பெரிய கடைகள், காய்கறி, பழச்சந்தைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களையும் கண்காணிக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் அதிக அளவில் மக்கள் கூடும் 27 இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை முகக் கவசங்கள் அணிவது இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாகக் கூட கூடிய இடங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.
கொரோனா மூன்றாவது அலையில் கேரளாவில் அதிகமாக மக்கள் பாதிக்கபட்டு வருகிறார்கள். ஆகையால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு கூறிய விதிமுறைகளை அனைத்தையும் மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும், குறிப்பாக அனைவரும் கட்டாயமாக முக கவசம், சமூக இடைவெளி, பின்பற்ற வேண்டும். கொரோனா மூன்றாவது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கும் என சுகாதார துறை தெரிவித்துள்ளது. ஆகையால் கர்ப்ணிபெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் அனைவருக்கும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருச்சி மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், அனைவரும் கட்டாயமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிற்து. மேலும் அரசு மருத்துவமனை, சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆகையால் மக்கள் அனைவரும் முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.