கொரோனா பொதுமுடக்க காலத்திற்கு பிறகு சொந்த வாகனங்களை வாங்குவதில் பலர் ஆர்வம் காட்டி வருகிறனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு அமலானது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு விலக்கப்பட்டாலும் இந்தாண்டு ஏப்ரம் மற்றும் மே மாதங்களில் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை பரவல் கடந்தாண்டை விட கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் மீண்டும் ஊரடங்குகள் அமலாக்கப்பட்டு பொது போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் சொந்தமாக இருசக்கர வாகனம் வாங்குவதற்கு பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 6 வட்டார போக்குவரத்து அலுவலங்கள் திருச்சி மண்டல போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் கடந்த 6 மாதத்தில் 45 ஆயிரம் வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை விட 4 ஆயிரம் வாகனங்கள் அதிகம் எனவும், இதில் 2 சக்கர வாகனங்கள் அதிகம் பதிவாகி உள்ளது என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 2.58 கோடி வாகனங்கள் உள்ளது. இதில் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக வாகனங்கள் பதிவாகி உள்ளது. இதற்கிடையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டது. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வாகன பதிவு கடுமையாக சரிந்ததாக போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி கடந்த ஆண்டு ஜனவரியில் 10,241, பிப்ரவரியில் 9915, மார்சில் 10,821, மே மாதத்தில் 2861, ஜூனில் 8624, ஜூலையில் 8406, ஆகஸ்டில் 9018, செப்டம்பரில் 10,843, அக்டோபரில் 8754, நவம்பரில் 9707, டிசம்பரில் 6831 என்று மொத்தம் 96,021 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஆண்டில் திருச்சி மண்டலத்தில் மொத்தம் 96 ஆயிரம் வாகனங்கள் பதிவாகி இருந்தது.
இதைப்போன்று கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக இந்தாண்டு மே மாதத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டைபோல் இல்லாமல் குறைவான நாட்கள் மட்டுமே இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வாகன பதிவு அதிக பாதிப்பு ஏற்படவில்லை. இதன்படி இந்தாண்டு ஜனவரி மாதத்தில் 8,690, பிப்ரவரி மாதம் 11,327, மார்ச் மாதம் 11,203, ஏப்ரல் 8475, மே 1,664, ஜூன் 4,111 வாகனங்கள் என்று மொத்தம் 45,470 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு முதல் 6 மாதத்தில் மொத்தம் திருச்சி மண்டலத்தில் 41,922 வாகனங்களும், இந்தாண்டு முதல் 6 மாதத்தில் மொத்தம் 45,470 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 3,548 வாகனங்கள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்கள்தான் இதில் அதிகம் பதிவாகி உள்ளது.
இதன்படி கடந்த ஆண்டு ஜனவரியில் 6,890, பிப்ரவரியில் 6,991, மார்ச்சில் 7,640, மே மாதத்தில் 2,256, ஜூன் மாதத்தில் 6,131 என்று மொத்தம் 29,908 இருசக்கர வாகனங்கள் பதிவாகி உள்ளது. இதைப்போல நடப்பாண்டு ஜனவரியில் 6,069, பிப்ரவரியில் 8,010, மார்ச்சில் 7,557, ஏப்ரலில் 5,616, மே மாதத்தில் 1,188, ஜூன் மாதத்தில் 3,018 என்று மொத்தம் 31,458 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.