தமிழகத்தில் கொரானா  பெரும்தொற்று  பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றில்  இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள்  தடுப்பூசியை அறிமுகம் செய்து மக்களுக்கு செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக முதல்கட்டமாக 40  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு  செலுத்தப்பட்டது. பின்பு  முன் களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது.  கொரோனா இரண்டாவது  அலை  மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து  தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என அரசு அறிவித்த உடன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது .திருச்சி மத்திய மண்டலத்தை பொறுத்தவரை அரியலூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில் மட்டும் 8126 பேர் செலுத்தி கொண்டுள்ளனர்.



தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தினசரி கொரோனா தொற்று 2500க்கு கீழ் குறைந்து வருகிறது. இதற்கிடையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழ்நாடு அரசு தீவிரமாக செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக அதிகம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வருகின்றனர். தற்போது வரை தமிழ்நாட்டில் 1.80 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போட அரசு அனுமதி அளித்தது. மேலும் இது தொடர்பாக வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டது. இதன்படி கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடும்போது சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி மற்றும் கவுன்சிலிங் வழங்க வேண்டும். தடுப்பூசி போடுவதின் பயன் மற்றும் அதனால் ஏற்படும் நன்மை உள்ளிட்டவை தடுப்பூசி தொடர்பான அனைத்து தகவல்களையும் கர்ப்பிணிகளுக்கு கவுன்சிலிங் மூலம் தெரிவிக்க வேண்டும்.


இதன்பிறகு அவர்கள் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே தடுப்பூசி செலுத்தவேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களை சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திய தகவலை உடனடியாக கோவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்திய பிறகு பக்கவிளைவு இருந்தால் மருத்துவ அலுவலர் அல்லது மாவட்ட தடுப்பூசி அலுவலரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை  அரசு வழங்கி இருந்தது. இதன்படி தமிழ்நாடு அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது.




இந்நிலையில் தற்போது வரை 43 ஆயிரத்து 855 பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 43 ஆயிரத்தி 679 பேர் முதல் டோசும், 59 பேர் இரண்டு டோசுகளும் செலுத்தி கொண்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக  அரியலூரில் 3070 பேருக்கும், மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சியில் 1843 பேருக்கும், கரூரில் 229 பேருக்கும், புதுக்கோட்டையில் 349 பேருக்கும், பெரம்பலூரில் 1029 பேருக்கும், அரியலூரில் 3070 பேருக்கும், நாகையில் 139 பேருக்கும், தஞ்சாவூரில் 680 பேருக்கும், திருவாரூரில் 552 பேருக்கும், மயிலாடுதுறையில் 235 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி 8126 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக அரசு கூறும் விதி முறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் ,குறிப்பாக கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என அனைவருமே தடுப்பு செலுத்திக்கொள்ள வேண்டும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.