கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஆர் விஜயபாஸ்கர் அரசியலில் ஆர்வம் கொண்டதால் தன்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.  பின்னர் படிப்படியாக வளர்ந்து, கட்சியின் மாவட்ட செயலாளர், அமைச்சர் என பதவிகளை பெற்றார்

அதிமுகவில் 2006 ஆண்டு முதல்  கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றிய செயலாளராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றிப் பெற்றார். அப்போது, தாந்தோணி ஒன்றிய சேர்மன் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் அப்போதைய அதிமுக மாவட்ட செயலாளரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமாக இருந்த செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் சேர்மேனாக தேர்ந்தெடுக்கப்பட, விரக்தி அடைந்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.  தொடர்ந்து 4  ஆண்டுகாலம் கவுன்சிலர் ஆகவே பொறுப்பில் தொடர்ந்தார். இதனிடையே அப்போதைய கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மற்றும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் தமிழக போக்குவரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  செந்தில்பாலாஜிக்கு போட்டியாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை வளர்த்துவிட்டார் தம்பிதுரை


அதன்பிறகு, ஜெயலலிதாவின் பார்வையில் படும்படியாக கட்சி பணிகளை செய்து வந்தார்.  அதிமுகவை பொறுத்தவரை கரூர் மாவட்டம் என்றாலே செந்தில் பாலாஜிதான் என்ற நிலையில், ஒரே கட்சியில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடும், அதிகார மோதலும் ஏற்பட்டது.


செந்தில்பாலாஜியின் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கியது அதிமுக தலைமை. அப்போதுதான் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அடித்தது யோகம். கரூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக விஜயபாஸ்கரை நியமித்தார் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 442 வாக்குகள் பெற்று எம்.ஆர். விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். ஆனால், அன்புநாதன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை, கண்டெய்னரில் பிடிப்பட்ட கோடிக்கணக்கான பணம் இவற்றைத் தொடர்ந்து,  செந்தில்பாலாஜி போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலை தள்ளி வைத்தது தேர்தல் ஆணையம்.  கரூரில் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு போக்குவரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து செந்தில்பாலாஜியும் - விஜயபாஸ்கரும் இருதுருவம் ஆனார்கள்.



ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் நிலைத்தன்மை இல்லாமல் இருந்த நிலையிலும், கட்சித் தலைமை தன்னை கண்டுக்கொள்ளாமல் விட்டதாலும், செந்தில்பாலாஜி திமுகவிற்கு மாறினார். அதேபோல், அமைச்சர் ஆவதற்கு முன்னர் தங்களது குடும்பத் தொழிலான சாயப்பட்டறை தொழிலை மேற்கொண்டு வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், அமைச்சர் ஆனதற்கு பிறகு கல்குவாரிகளில் அதிக அளவு முதலீடு செய்தார், பெட்ரோல் பங்குகள், நிலங்கள் என சொத்துக்க்களை வாங்கி குவித்தார். எம்.ஆர். விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவர் துறையில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பேருந்துகளை அப்புறப்படுத்திவிட்டு 2500க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை வாங்கும் திட்டத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இதில் முறைகேடு பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதேபோல், போக்குவரத்து துறையில் பணியாளர்களை நியமனம் செய்வதில் பெரிய அளவில் பணம் விளையாடியுள்ளதாகவும் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து மனு அளித்திருந்தார்.


இந்த நிலையில் தான் இன்று அதிகாலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இல்லம் மற்றும் அவருக்கு சொதமான 21 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் இல்லங்களில்தான் முதலில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரை முதலில் குறி வைத்து ரெய்டு நடத்தப்பட்டதன் பின்னணியில் செந்தில்பாலாஜி உள்ளதாக கூறப்படுகிறது.  அவர்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாங்கி குவித்த சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொடுத்த்துள்ளார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


சோதனை நடைபெற்று வரும் இடங்கள் :



  • போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வாகனங்களில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் வாங்குவதிலும் மற்றும்  வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் பெற்றுள்ளது என புகாரின் அடிப்படையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமாக கரூரில் உள்ள வீடு மற்றும் ரெயின்போ என்ற பெயரில் அவர் நடத்தும் நிறுவனங்களான கல்குவாரிகள் ,சாயப்பட்டறை,மற்றும் அட்டைப் பெட்டி தயாரிப்பு நிறுவனம்,  எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரான சேகர் நடத்தும் நிறுவனங்கள் மற்றும் அவரது மனைவி சாந்தி பெயரில் உள்ள நிறுவனத்திலும் அதிகாலையிலையே லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர்  சோதனையில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

  • ஆட்சியில் இருக்கும் போது எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அரசு உதவியாளராக இருந்த கார்த்திக் மற்றும் தனி உதவியாளராக இருந்த ரமேஷ் ஆகியோர் வீட்டிலும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனையில்  ஈடுபட்டார்கள்

  • அத்துடன் அதிமுக கட்சியில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்த ஏகாம்பரம் ,பரமசிவம் உறவினரும் ரியல்எஸ்டேட் புரோக்கருமான சேகர் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

  • மொத்தம் 21  இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கிறார்கள் - அதில் கரூரில் 20 இடங்கள், சென்னை விஜயபாஸ்கர் இல்லம் என 21 இடங்களில் சோதனை.