திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலம் மலைக்கோட்டை கிளையில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறப்பு விழா நடந்தது. மேலும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மலைக்கோட்டை பணிமனை கிளையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு 669 பயனாளிகளுக்கு ரூ.196.47 லட்சம் பணப்பலன்களை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், தமிழ்நாட்டில் போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் செய்து வருகிறார்.
குறிப்பாக முதல்வர் ஓட்டுனராகவும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நடத்துனராகவும், போக்குவரத்து துறை அமைச்சர் செக்கிங் இன்ஸ்பெக்டர் ஆகவும், இருந்து உங்கள் அனைவரையும் வழி நடத்துகிறார்கள். குறிப்பாக திருச்சி கும்பகோணம் கோட்டம் மண்டலத்தை தமிழ்நாட்டில் சிறப்பு வாய்ந்த மண்டலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் முதன்மையான கோட்டமாக திகழ்வது கும்பகோணம் கோட்டம் தான். குறிப்பாக தமிழ்நாட்டில் லாபம் மற்றும் நஷ்டம் பார்க்காத துறையாக செயல்பட்டு வருவது பள்ளி கல்வித்துறையும், போக்குவரத்து துறையும் தான். மேலும் கட்டணம் இல்லாமல் பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்யலாம் என்ற சிறப்புமிக்க திட்டத்தை அறிமுக செய்து இந்தியாவிலேயே ஒரு முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது, என்றால் அது மிகையாகாது. தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி எவ்வளவு இருந்தாலும், மக்களுக்கும், அரசு ஊழியருக்கும், குறிப்பாக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய தமிழ்நாடு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், “திருச்சியில் இன்று கும்பகோணம் கோட்டத்தில் தான் சிறப்பாக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று கூறுகிறோம். நாளை மதுரைக்கு சென்றால் மதுரை கோட்டத்தில் பணியாற்றுபவர்கள் தான் சிறப்பாக பணியாற்றுகிறோம் என்போம், இதை எல்லாம் பெரிது படுத்தக்கூடாது. போக்குவரத்து துறை, பள்ளிகல்விதுறை தான் லாபம், நஷ்டம் பார்க்காமல் இயங்கி வருகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் நகராட்சி நாங்கள் ஒரு நாள் சுத்தம் செய்யவில்லை என்றால் உங்கள் போக்குவரத்து துறை, பள்ளிகல்விதுறை எண்ணாகும். எல்லாத் துறைகளின் சேவை முக்கியமானது. ஆனால் நகராட்சி நிர்வாக துறை மிக முக்கியமானதாக உள்ளது. நாங்கள் 2 மணி நேரம் சுத்தம் செய்யவில்லை என்றால் நாறிப் போய்விடும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “வருடத்திற்கு 3000 அரசு பேருந்துகள் நம் துறையின் கீழ் வாங்க வேண்டும் என்கிற திட்டத்தை கொண்டு வந்தது திமுக ஆட்சியில் இருந்த போது தான். கலைஞர் காலத்தில் தான் அதிகமான போக்குவரத்து துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 15 ஆண்டுகளில் போக்குவரத்து துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வருடம் தோறும் ஊதிய உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தொழிலாளிகளின் ஓய்வூதிய பலன் பிரச்னையை தீர்த்து வைத்துள்ளார்கள், இது மிக மிக வரவேற்கதக்கது. ஓய்வூதிய பலன்களை அப்போது எல்லாம் 5 வருடம் கூட கொடுக்க முடியாத நிலை எல்லாம் இருந்தது. ஆனால் தற்போது ஓய்வு பெற்று வீட்டிற்கு செல்லும் போதே வாங்கி விட்டு செல்லாலாம்” என தெரிவித்தார்.