அறந்தாங்கியில் அரசு மருத்துவமனைக்கு வரும் வழியிலே ஆட்டோவில் ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோவை ஒட்டிய 22 வயது இளைஞர் குழந்தை அழும் சத்தம் கேட்டதும் பதற்றப்படாமல் சுதாரித்துக்கொண்டு பக்குவமாக மருத்துவமனை அழைத்துவந்தார். 


நிறைமாத கர்ப்பிணி:


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அமராவதி நகரை சேர்ந்தவர் பைரோஸ்கான் இவரது மனைவி தஸ்லிமா இவர்களுக்கு  ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தஸ்லிமாவுக்கு வயிற்றில் லேசாக வலி ஏற்பட்ட நிலையில்  அக்னிபஜார்  ஆட்டோ ஸ்டாண்டில் அப்துல் ஃபைசல் என்பவருடைய ஆட்டோவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருக்கின்றார்கள்.  


உடனே அப்துல் ஃபைசல் தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு தஸ்லிமா  வீட்டிற்கு சென்றுள்ளார்.   ஆட்டோவில் தஸ்லிமா மற்றும் அவரது  இரண்டு வயது குழந்தையையும் மட்டும் ஏறியுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் ஆட்டோ டிரைவரிடம் இவரை மட்டும் மருத்துவமனையில் விட்டுவிடுங்கள் நாங்கள் பிறகு வருவதாக சொல்லி அனுப்பியுள்ளார்கள். குழந்தை பிறப்பதற்கான அறிகுறி இல்லாததால் அவர்கள் யதார்த்தமாக இருந்துள்ளனர்.


ஆட்டோவில் பிறந்த குழந்தை:


இந்நிலையில் ஆட்டோ  அரசு மருத்துவமனையை அடைய   500 மீட்டர் தொலைவு இருந்த நிலையில்  ஆட்டோவிற்குள்  குழந்தை அளும் சத்தம் கேட்டு ஆட்டோ ஓட்டுநர் அப்துல் பைசல் கர்ப்பிணி பெண்ணிடம் என்ன  குழந்தை அழுகிற சத்தம் வருகிறது என்று கேட்டுள்ளார். அப்போது  தஸ்லிமா ஆமாம் குழந்தை தானாக வந்துவிட்டது என்று சொன்னதுடன் பதற்றத்தில் தடுமாறாமல்  சுதாரித்துக் கொண்ட 22 வயது இளைஞர் அப்துல் பைசல் ஆட்டோவை சீரான வேகத்தோடு மேடு பள்ளங்களில் விடாமல் மருத்துவமனைக்கு அழைத்து வந்து உடனடியாக ஓடி சென்று மருத்துவரிடம் தகவல் தெரிவித்து இருக்கின்றார்.


மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் ஓடிவந்து  ஆட்டோவை சூழ்ந்து நின்று கொண்டு ஆட்டோவில் குழந்தை தாய்க்கு இருக்கின்ற தொப்புள் கொடியை அறுவை செய்து தாயையும், சேயையும் பத்திரமாக மருத்துவமனை உள்ளே அழைத்துச் சென்றனர்.  ஆட்டோவில் ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. 


 மருத்துவமனை வந்து சேர்ந்த பிறகு தான் தஸ்லிமா உறவினர்கள் மருத்துவமனை வந்திருக்கின்றார்கள்.  அவர்களுக்கு குழந்தை பிறந்து விட்டது என்ற செய்தி  அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தனர்.  22 வயது இளைஞரான ஆட்டோ ஓட்டுனர்  எந்தவித பதற்றமும் இல்லாமல் பக்குவமாக  தாயையும் குழந்தையையும்  மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்ததை மருத்துவர்கள் மற்றும் செவிலியர் உள்ளிட்டோர்  அனைவரும் பாராட்டினர்.