திருச்சியில் உள்ள சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில், பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் என்ற திட்டத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் 6, 8, 9, 10, 11-12 என்று பிரிவுகளாக பிரிக்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நூலகத்தில் உள்ள நூல்களிலிருந்து வாரம் ஒன்று வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் புத்தகத்தை  வீட்டுக்கும் எடுத்துக்கொண்டு போகலாம். அதை வாசித்து முடித்தவுடன் நூலகத்தில் திருப்பித் தந்துவிட்டு அடுத்த நூலை எடுத்துக்கொள்ளலாம். படித்த நூல் குறித்து விமர்சனம் எழுதலாம். அதை வைத்து ஓவியம் வரையலாம். நாடகம் நடத்தலாம். கலந்துரையாடல் செய்யலாம்.


இதனைத் தொடர்ந்து, அமைச்சர்  மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான நூலக செயலியினை அறிமுகம் செய்து பேசிய போது, ”புத்தக வாசிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக  ‘புத்தகம் படிக்கலாம் வெளிநாடு பறக்கலாம்’ என்று அறிவித்துள்ளோம். இந்த திட்டத்தின் மூலம் பெரிய எழுத்தாளர்களுடன் கலந்துரையாடுவதற்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அரசு கொண்டுவரும் திட்டங்களை நல்ல விதத்தில் பயன்படுத்த வேண்டும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது புத்தகங்கள் மட்டுமே” என்றார்.




 


இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக திருச்சி, அரியலூர், கரூர், திண்டுக்கல் பகுதிகளை சார்ந்துள்ள பள்ளி கல்வித்துறை அதிகாரியுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் 2500 பள்ளிகள் மரத்தடியில் மாணவர்களுக்கு கல்வி கற்கும் சூழ்நிலையில் உள்ளது. இவற்றை முழுமையாக தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள், வகுப்பறைகள் மதில் சுவர்கள் ஆகியவற்றிற்கு நிதிகள் கேட்கப்பட்டுள்ளது. அந்த நிதிகள் வந்தவுடன் விரைவில் பணிகள் தொடங்கும்” என்றார்.


மேலும், ட்விட்டர் ட்ரெண்டிங் ஆனது குறித்த கேள்விக்கு, பெரியாரின் அன்பு நண்பர் அன்பில், அன்பில் பேரனுக்கு வந்த கொடுமை சார் இது என்று தெரிவித்தார்.


 




மேலும், ”இந்த விவகாரம் தொடர்பாக சமூகவலைதளங்களில் எனக்கு ஆதரவு, அறிவுரைகள், கேள்விகள் கேட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிஇஓவாக நியமிக்கப்பட்டவரின் பின்புலம் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் வருவதால், தற்பொழுது என்னையும் சேர்த்து விமர்சனங்கள் வருவதால், அவருக்கு வழங்கிய பணி ஆணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளேன். அவரை பற்றி முழுமையாக விசாரித்து தகவல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளேன். தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளது போல் எதிலும் சமரசம் இல்லை, அவருடைய வளர்ப்பு நான் இதை நான் பாசிட்டிவாக எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.


மேலும், பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் 2500 பேர் விரைவில் தேர்வாகி பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும், சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் இதனை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.


 







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண