தமிழகத்தில் நாளுக்குநாள் போதை மருந்துகளின் பயன்பாடும், அதற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை நினைக்கும் போது எனக்கு கவலையும், வருத்தமும் அதிகமாகிறது. மேலும் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு போதை தான் தூண்டுகோலாக இருக்கிறது. போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுத்தல் என்பது மக்கள் இயக்கமாக செயல்பட வேண்டும். போதைப் பொருள் விற்க மாட்டோம் என வியாபாரிகள், கடைக்காரர்கள் உறுதி எடுக்க வேண்டும். போதையின் தீமையை மருத்துவர்கள் பரப்புரை செய்ய வேண்டும்.  தமிழ்நாட்டில் போதை பொருட்கள் தயார் செய்யவில்லையென்றாலும் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் போதைப்பொருளுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு, மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி, மாரத்தான், ஓவிய போட்டி, கருத்தரங்கம், என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மேலும் திருச்சி மாவட்டத்தில் போதைப்பொருளை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.




இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில், திருச்சி எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா கோர்ட்டு சாலை அருகில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி  நடைபெற்றது. இந்த பேரணியினை மாவட்ட ஆட்சியர்  மா.பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போதைப் பொருட்களுக்கு எதிரான பதாகைகள் பொருத்திய இந்த மோட்டார் சைக்கிள் பேரணியானது அய்யப்பன் கோவில் வழியாக செயின்ட் ஜான் வெஸ்ட்ரி பள்ளி, மத்திய பேருந்து நிலையம், காமராஜர் சிலை ராக்கின்ஸ் சாலை, ரெயில்வே சந்திப்பு ரவுண்டானா, தலைமை அஞ்சல் நிலைய ரவுண்டானா, டி.வி.எஸ். டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டரங்கம் சென்றடைந்தது. 




காவலர்களின் பேண்டு வாத்திய இசையுடனும் நான்கு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பதாகைகள் பொருத்திய நான்கு சக்கர வாகனங்களும் இந்த அணிவகுப்பில் பஙகேற்றன. இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர்கள் அன்பு, சுரேஷ்குமார், உதவி ஆணையர்கள் அஜய்தங்கம், செந்தில்குமார், ராஜூ, பாலசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் கோ.தவச்செல்வம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில்  திருச்சி கோர்ட்டு சாலை எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா அருகில் இருந்து காவல்துறையின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்கும் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண