திருச்சியை அடுத்த நெ.1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சி சாய் நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ் (வயது 37). இவரது மனைவி சிவரஞ்சனி (27). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். நரசிம்மராஜியின் தாய் வசந்தகுமாரி (55) என்பவரும் இவர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி நள்ளிரவு நரசிம்மராஜ் தனது மனைவி சிவரஞ்சனியை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் சுருட்டி வீட்டின் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு தப்பிச்சென்று தலைமறைவானார். இந்த கொலை சம்பவம் குறித்து சிவரஞ்சனியின் தந்தை கோபிநாத் கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நரசிம்மராஜ், அவரது தாய் வசந்தகுமாரி ஆகியோரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.


இந்நிலையில் நரசிம்மராஜ் நெ.1 டோல்கேட் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் நரசிம்மராஜ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- சமயபுரம் பகுதியில் இருந்த எங்களுக்கு சொந்தமான வீட்டை விற்பனை செய்துவிட்டு, தாளக்குடி சாய் நகரில் உள்ள ஒரு மாடி வீட்டில் ரூ.6 ஆயிரம் வாடகையில் குடியேறினோம். வீடு விற்ற பணத்தில் கடனை அடைத்தது போக மீதமுள்ள தொகையை எனது மனைவி வங்கி கணக்கிலும், எனது வங்கி கணக்கிலும் செலுத்திவிட்டோம். என்னிடம் இருந்த பணத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை இழந்துவிட்டேன்.




மேலும் வயதான எனது தாய் வசந்தகுமாரிக்கு அடிக்கடி மருத்துவ செலவுகள் செய்து வந்தேன். இதனையறிந்த சிவரஞ்சனி அவ்வப்போது என்னிடம் தகராறில் ஈடுபடுவார். அப்போதெல்லாம் என் தாய் இருவரையும் சமாதானமாக செல்லும்படி வலியுறுத்துவார். இதனால் எங்கள் மீது கடும் கோபத்தில் இருந்த சிவரஞ்சனி எனது தாய் வசந்தகுமாரியை தனி குடித்தனம் வைக்கும்படி கூறியும், என்னிடம் இருந்த பணத்தை திருப்பி கேட்டும், தினசரி தகராறில் ஈடுபட்டு வந்தார்.


சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் என்னிடம் தகராறு செய்துவிட்டு சிவரஞ்சனி தூங்கிவிட்டார். இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினேன். ஒரு கட்டத்தில் எனது மன உளைச்சலுக்கு காரணமான மனைவி சிவரஞ்சனியை கொலை செய்ய திட்டமிட்டேன். சம்பவத்தன்று நள்ளிரவு பிள்ளைகள் மற்றும் தாய் வசந்தகுமாரி தூங்கிய பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மற்றொரு படுக்கை அறை கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த மனைவியை வெட்டிக் கொலை செய்தேன்.




பின்னர் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் சுருட்டி கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு விடியும் வரை காத்திருந்தேன். விடிந்ததும் எனது தாய் வசந்தகுமாரியிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தேன். அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் எனது தாயிடம் உங்களை ஆந்திராவில் உள்ள சகோதரி வீட்டில் விட்டுவிட்டு நான் போலீசில் சரணடைகிறேன் என்று கூறினேன். பிள்ளைகளிடம் அம்மாவுக்கு கொரோனா இருப்பதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறி 3 பேரையும் ஆந்திராவிற்கு கூட்டிச்சென்று எனது சகோதரி வீட்டில் பிள்ளைகளையும், மற்றொரு இடத்தில் என் தாயையும் விட்டுவிட்டேன். பின்னர் திருச்சி நெ.1 டோல்கேட்டிற்கு வந்த நான் போலீசில் சரணடைய பயந்துகொண்டு பதுங்கியிருந்தேன். அப்போதுதான் போலீசிடம் சிக்கிக்கொண்டேன்.இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆந்திராவில் இருந்து வசந்தகுமாரியை வரவழைத்து கொலையை மறைக்க உடந்தையாக இருந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரையும் கைது செய்தனர். பின்னர் நரசிம்மராஜையும், வசந்தகுமாரியையும் சிறையில் அடைத்தனர்.