திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் திருச்சி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மேயர் அன்பழகன், திருநாவுக்கரசர் எம்.பி., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனர் வினய், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, தற்போது பள்ளிகள் திறந்து இருப்பதால் மாணவர்களுக்கு உடனடியாக இருப்பிடம், வருமானம் மற்றும் சாதிச்சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்களுக்கு முதியோர் பென்சன் வழங்கவும், தகுதியில்லாதவர்கள் பென்சன் வாங்கி இருந்தால் அது குறித்து ஆய்வு செய்யவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 




மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலங்களை அளக்க சர்வேயர் பற்றாக்குறை இருப்பதை புரிந்து கொண்டு, நிலங்களை அளக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறோம். திருச்சி விமான நிலையத்துக்கு நிலம் எடுப்புக்கு 20 எக்டேர் நிலத்துக்கு பணம் கொடுத்துள்ளோம். இன்னும் 75 எக்டேர் நிலத்துக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது. நிலங்கள் வகைப்பாடு செய்கிற பணிகளும் விரைவில் செய்யப்பட உள்ளன. இன்னும் 3 மாதத்தில் அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்படும். புதிதாக அரசு தேர்வாணையம் மூலம் 800 சர்வேயர்களை பணிக்கு எடுக்க உள்ளோம் என்றார்.  தொடர்ந்து பேசிய அமைச்சர், பட்டா வழங்குவதை முறைப்படுத்த அரசு ஆய்வு செய்து வருகிறது. நிறைய வீடுகள் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ளது. ஆனால் அந்த இடத்தை 30 வருடம் முதல் 50 வருடம் வரை பரம்பரையாக அனுபவிப்பவர்களை உடனடியாக காலி செய்ய முடியாது. அதற்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று முடிவு செய்வோம். சான்றிதழ் வேண்டி ஆன்லைனில் விண்ணப்பித்தால், அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் கிடைத்துவிடும். 15 நாட்களுக்குள் வழங்க அறிவுறுத்தியுள்ளோம். சான்றிதழ் வரவில்லை என்றால் அதிகாரிகளை சந்தித்து முறையிட வேண்டும். சான்றிதழ் வழங்க பணம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.




திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் 5½ லட்சம் பேர் சாதிச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் கேட்டுள்ளனர். அதில் 4½ லட்சம் பேருக்கு கொடுத்துவிட்டார்கள். மீதமுள்ளவர்களுக்கு கொடுக்காமல் இருப்பதற்கு விண்ணப்பங்களில் குறைபாடு இருக்கலாம். பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்டு வருகிறோம். சென்னையில் ஆக்கிரமிப்புகளால் தான் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. புதிய தாலுகாக்கள் குறித்து வருகிற பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்றார். முன்னதாக ஆய்வுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் வருவாய்த்துறை சம்பந்தமாக பட்டா வழங்க வேண்டும். தாலுகா அலுவலகங்கள் கட்ட வேண்டும். குறிப்பிட்ட சில பகுதிகளை பிரித்து தனி தாலுகாக்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். மேலும், எம்.எல்.ஏ.க்களை தாசில்தார்கள் சந்தித்து பேசுவது கிடையாது என்றும், எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக விண்ணப்பம் கொடுத்தால் ஒரு சில தாசில்தார்கள் அதை பரிசீலிப்பது கிடையாது என்றும் குற்றம்சாட்டினார்கள். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அளிக்கும் கோரிக்கைகள் தகுதியுள்ளதாக இருக்கும்பட்சத்தில் அதிகாரிகள் அவற்றை நிறைவேற்றி கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் மக்களை சந்தித்து பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண