சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை கொன்றது எப்படி - கைதான மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம்

''கல்லால் பூமிநாதனின் தலையில் தாக்கியும், தான் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அரிவாளை எடுத்தும் அவரது தலை, கழுத்தில் பலமாக வெட்டியுள்ளார்''

Continues below advertisement

திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான மணிகண்டன் காவல்துறையிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, கொலை வழக்கில் கைதான மணிகண்டன் ஆடுகளை திருடி விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டவர். ஆடுகளை சமயபுரம் ஆட்டு சந்தை உள்ளிட்ட சந்தைகளிலும், இறைச்சி கடைகளிலும் விற்று வந்துள்ளார். இதற்கு துணையாக உறவு முறையான 14 வயது சிறுவனையும் அழைத்து கொண்டு சென்றுள்ளார். பல இடங்களில் திருடியும் இதுவரை அவர் போலீசாரிடம் சிக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் சம்பவத்தன்று தோகூரில் ஒரு ஆட்டை திருடி கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அப்போது தான் காவல் துறையினர் வழிமறித்தபோது வண்டியை நிறுத்தாமல் வேகமாக தப்பிச் சென்றிருக்கிறார். அதேநேரத்தில் வண்டியில் இருந்த 2 சிறுவர்களையும் ஆட்டை இறுக பிடித்து கொண்டு இருக்க கூறி இருக்கிறார்.

Continues below advertisement


சுரங்கப்பாதையில் தண்ணீர் இருந்ததால் தப்பி செல்ல வழியில்லாமல் சிக்கிக்கொண்டார். மணிகண்டனின் தாய்க்கு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததால், கைதாகி சிறைக்கு சென்றுவிடுமோ? என மணிகண்டன் அச்சம் அடைந்துள்ளார். அப்போது கல்லால் பூமிநாதனின் தலையில் தாக்கியும், தான் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அரிவாளை எடுத்தும் அவரது தலை, கழுத்தில் பலமாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததும் மற்ற 2 சிறுவர்களும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். கொலை செய்த உடன் அதே மோட்டார் சைக்கிளில் 3 பேரும் தப்பிச்சென்றனர். மேலும் மணிகண்டனின் உறவினர் ஒருவர் இறந்த துக்க காரிய நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டி இருந்ததால் செலவுக்காக ஒரு ஆட்டை திருடியிருக்கின்றனர். அந்த ஆட்டை கீரனூர் பகுதியில் ஒருவரிடம் மணிகண்டன் விற்றிருக்கிறார். மேற்கண்ட தகவலை மணிகண்டன் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக  காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டது குறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் கூறியது. சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை வழக்கில் மணிகண்டன் (19) மற்றும் 2 சிறுவர்களை கைது செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், பொருட்கள், அரிவாள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மணிகண்டனோடு சிறுவர்களும் சேர்ந்து தாக்கி உள்ளனர். மேலும் சிறுவர்கள் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ததாக கூறுவது நம்பும் படி இல்லை என அரசியல் வட்டாரத்தில் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கொலை சம்பவத்தை அரசியல் ரீதியாக பார்க்க கூடாது. சப்-இன்ஸ்பெக்டரின் உடல் பிரேத பரிசோதனையில் அவர் பின்னால் இருந்து தாக்கப்பட்டுள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. முன்பக்கமாக அரிவாளால் வெட்டும்படி சம்பவம் நடைபெறவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் தெளிவாக உள்ளது. அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது எதிர்பாராத நேரத்தில் பின்னால் இருந்து அவர்கள் தாக்கியுள்ளனர். சப்-இன்ஸ்பெக்டரை பின்தொடர்ந்து வந்த ஏட்டுவின் வாகனம் பழுதாகவில்லை. வழி தெரியாமல் மாறி சென்றதால் அவர் வர தாமதமானது. அந்த இடைப்பட்ட நேரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை அவர்கள் தாக்கியுள்ளனர்.


பூமிநாதன் செல்போனில் பல காவல்துறைக்கு  தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததால் அந்த பயத்தினால் கூட அவர்கள் அவரை கொலை செய்திருக்கலாம். இந்த வழக்கில் கொலைக்கான தடயங்கள், அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு எதுவும் இல்லை. மணிகண்டன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பொதுவாக இரவு நேர ரோந்து பணியின் போது காவல்துறையினர் 2 பேராக செல்ல வேண்டும். தங்களுடைய பாதுகாப்பையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு  துப்பாக்கி கொடுப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படும் என்றார். மேலும்  இந்த வழக்கின் விசாரணை திருப்திகரமாக உள்ளது. கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் போதுமான ஆதாரங்கள் உள்ளது என்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola