தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மகன் சாமிநாதன் (வயது 37). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவரது தங்கை தையல்நாயகிக்கு அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவருக்கும் தா.பழூர்-ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள அணைக்குடம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, சாமிநாதன் திருமண மண்டபத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்று தனது செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சாமிநாதனை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் நிலைக்குலைந்த சாமிநாதன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.


பின்னர் அந்த கும்பல் மின்னல் வேகத்தில் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பட்டப்பகலில் வக்கீல் ஒருவரை மர்ம ஆசாமிகள் வெட்டிக்கொன்றதை கண்ட வியாபாரிகள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் கத்தி கூச்சலிட்டவாறு நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும் தா.பழூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சாமிநாதன் கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்த திருமண மண்டபத்தில் இருந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து கதறி அழுதனர்.




இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சாமிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தடயவியல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சத்யராஜ் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். அரியலூரில் இருந்து மோப்பநாய் டெய்சி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும், கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.தங்கை திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 




படுகொலை செய்யப்பட்ட சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சாமிநாதன் தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் போலீஸ் சரகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், அதன் காரணமாக பழிக்குப்பழி வாங்கும் செயலாக தற்போது சாமிநாதன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:- கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந் தேதி நாச்சியார் கோவில் நகரில் வசித்து வந்த செல்வமணி (43) என்பவருக்கும், சாமிநாதனின் அண்ணன் மாரியப்பன் என்பவருக்கும் மது குடிக்கும் போது தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் தனது தம்பி சாமிநாதன், அதே பகுதியில் வசித்து வரும் சந்திரமோகன், திருநாகேஸ்வரம் பகுதியை சேர்ந்த ரமேஷ், திருவிடைமருதூர் மணலூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், திப்பிராஜபுரம் சென்னியமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜா ஆகியோர் செல்வமணியின் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து உள்ளனர். மேலும், இதனை தடுக்க முயற்சி செய்த செல்வமணியின் மகள் தாரணி என்பவரையும் வெட்டியுள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து செல்வமணியின் மனைவி வேம்பு, நாச்சியார்கோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் தீபநாதன் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்துள்ளார். இந்த கொலை வழக்கில் வக்கீல் சாமிநாதன் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். எனவே சாமிநாதன் முன்பகை காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.