திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 28). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் விராலிமலை அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு சோதனை செய்யும் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. தினமும் மண்ணச்சநல்லூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் திருச்சி வருகை தரும் அவர் மன்னார்புரம் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து நிறுவன பேருந்தில் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்ற அவர் மதியம் 3 மணிக்கு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு உள்ளார். ஆனால் இரவு வரை பாஸ்கர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது பெற்றோர் மகனின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து பதட்டம் அடைந்த அவர்கள் நிறுவனத்தில் கேட்டபோது, பாஸ்கர் புறப்பட்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.
இதற்கிடையே நேற்று காலை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணமூர்த்தி நகர் அருகேயுள்ள ராணுவ மைதான தளம் அருகே சாலையோரம் ஏராளமாக ரத்தக்கறை படிந்து காணப்பட்டது. உடனே அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து உடனடியாக கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு மோப்ப நாயுடன் விரைந்து வந்த போலீசார் சுற்றிப்பார்த்தனர். அப்போது அங்கு பாஸ்கர் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
அவருக்கு அருகிலேயே ரத்தம் படிந்த மரக்கட்டை ஒன்றும், பாஸ்கரின் தலை கல்லில் மோதப்பட்டதற்கான அடையாளமும் தென்பட்டது. பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் யாரோ மர்ம நபர்கள் பாஸ்கரை வழிமறித்து ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்று கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேதிக்கிறார்கள். மேலும் வழக்கமாக மன்னார்புரத்தில் நிறுத்தப்படும் பாஸ்கரின் இருசக்கர வாகனம் இன்று காலை கே.கே.நகர் சார்பதிவாளர் அலுவலகம் அருகே நின்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே மன்னார்புரம் பகுதியில் இருந்து அவர் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினையா அல்லது பெண்கள் தொடர்பான பிரச்சினையா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை சம்பவம் நடந்த இடத்தில் துணை போலீஸ் கமிஷனர் ஸ்ரீதேவி, உதவி கமிஷனர் பாரதிதாசன், கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பொதுமக்கள் நெடுஞ்சாலையில் வாகனங்களில் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். குறிப்பாக மது அருந்திவிட்டு செல்ல கூடாது, இரவு நேரங்களில் சாலையில் ஓரமாக தேவையில்லாமல் மக்கள் நிற்ககூடாது என தெரிவித்தனர். மேலும் சந்தேகம்படும்படி யாராவது தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கவேண்டும் என காவல்துறை தரப்பில் பொதுமக்களிடையே வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்