திருச்சி சத்திரம் பேருந்து  நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரி பாலத்தில் 5 மாதங்கள் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காவிரி பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியுடன் அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரி பாலத்துக்கு முன்னதாக உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து ஓயாமரி வழியாக சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை பழைய பாலத்தின் வழியாக சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக ரெயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக்காவல் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம். மேலும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து இடதுபுறம் உள்ள ரெயில்வே மேம்பாலம் வழியாக திருவானைக்காவல் வந்தடைந்து வலதுபுறம் திரும்பி டிரங்க் சாலை வழியாக ரெயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை பழைய பாலத்தின் வழியாக வந்து வலதுபுறம் திரும்பி ஓயாமரி வழியாக அண்ணாசிலையை வந்தடைந்து சத்திரம் பஸ் நிலையம் செல்லலாம். இதேபோல் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தை தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவிநகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ.1 டோல்கேட்டை அடைந்து சென்னை செல்லலாம்.




மேலும் சென்னையில் இருந்து திருச்சி வரும் வாகனங்கள் புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சியை வந்தடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி பாலத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் பாலத்தின் முன்பு இரும்பு பேரிகார்டுகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டுள்ளன. தற்காலிகமாக காவிரி பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. இதன் காரணமாக திருச்சி ஓயாமரி சாலை மற்றும் திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.




மேலும் திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து வரிசையில் நின்று மெதுவாக சென்று வருகின்றன. இந்தநிலையில் காவிரி பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் சென்று வருவதை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையே காவிரி பாலத்தில் நேற்று முதலே பராமரிப்பு பணிகளும் தொடங்கியது. ஊழியர்கள் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதிகளில் எந்திரம் மூலம் பணியில் ஈடுபட்டனர். பாலத்தில் வாகனங்கள் செல்லாததால் பொதுமக்கள் அதிக அளவில் கூடி நின்று காவிரி ஆற்றின் அழகை ரசித்து வருகிறார்கள்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண