திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,  பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஆர்.சத்யநாத உடையார் இல்ல திருமண விழா நடைபெற்றது. இத்திருமண விழாவினை தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னின்று நடத்தி வைத்தார். இவ்விழால் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.பாரிவேந்தர், கட்சியின் மாநில தலைவர் டாக்டர்.ரவி பச்சமுத்து உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இவ்விழாவின் மணமக்களான ச.ரோஷிணி ராய் - ரா.ஜெரோம் ஜோஸ்வா ஆகியோரை வந்திருந்த அனைவரும் வாழ்த்தி மகிழ்ந்தார்கள். இந்த மணவிழாவில் 'வாக்களிப்பதில் பெருமை கொள்வோம்..! இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்..!' என்ற வாசகத்துடன், வாக்காளர் அடையாள அட்டையுடன்,  ஆதார் எண்ணை இணைக்கும் இலவச சேவை மையத்தை மணமக்கள்  திறந்துவைத்தனர். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய டாக்டர் பாரிவேந்தர் பச்சமுத்து, “தலைமை பொறுப்பு நிரந்தரமானது அல்ல. பதவியில் இருப்பவர்  சமூகத்திற்கு என்ன செய்தோம் என்பதை பதிவுசெய்துவிட்டு செல்ல வேண்டும். 5 முறை தலைவராக இருப்பவரால் என்ன செய்ய முடியுமோ..! அதை 2 முறை தலைவராக இருந்த சத்தியநாதன் சாதித்துள்ளார். இந்த திருமண விழாவில் சங்க மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வளர்ந்த கட்சியினர் கல்யாண மேடைகளில் பேசிதான் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள்.




மேலும் சாதி இல்லை என்று சொல்பவர்கள், தொகுதியில் எந்த சாதி மக்கள் அதிகமாக இருக்கிறார்களோ அந்த சாதியை சேர்ந்தவரைத்தான்  வேட்பாளராக நிறுத்துகிறார்கள். நான் பாஜக கூட்டணியில் 2.40 லட்சம் வாக்குகள் பெற்றேன். பின்னர் மாற்று கூட்டணியில் 2.47 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். என்னை பொறுத்தவரை  எம்.பி பதவி என்பது எனது அடையாளத்தின் சிறு துளி. இதற்காக நான் போகாத இடத்திற்கு போய் இருக்க வேண்டாம். நான் தனித்து போட்டியிட்டிருந்தால் கூட 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்று இருப்பேன். இதனை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன். நாங்கள் அவசரப்பட்டு விட்டோம்” என்று பேசினார்.




திருமணவிழாவில் முன்னதாக தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு மேடையில்  பேசுகையில், “ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தொடக்கம் தொடங்கப்பட்ட (பா.மு.ச) அமைப்பு. பின்னர் அரசியல் கட்சியாக (ஐ.ஜே.கே) மாற்றப்பட்டது. அதன் தலைவர் எடுக்கக்கூடிய முடிவுகள் சரியோ! தவறோ! அந்த தலைமைக்கு உண்மையாக இருந்து, அதனை அப்படியே கேட்டு அமல்படுத்தக் கூடியவராக சத்தியநாதன். எங்களோடு (திமுக) வந்து விடுங்கள் என நான் அழைத்தது கூட அதை அவர் மறுத்து விட்டார். இன்றைக்கு அவர்கள் திமுக அணியில் இருந்து மாறி இருந்தாலும் கூட, நாங்கள் அவர்களை மறக்கவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திருச்சி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உதவி புரிந்தவர் சத்தியநாதன். அவரது இல்ல திருமண விழாவில் பங்கேற்பது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கிறது. மணமக்கள் நீடூடி வாழ வேண்டும்” எனப் பேசினார்.