திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். 


இந்நிலையில் சிறுகனூர் அருகே பேருந்து சென்றுக்கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக , முன்னே சென்று கொண்டு இருந்த மணல் லாரி மீது திடீரென பேருந்து வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மேலும் பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. 


அரசு பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அப்பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் விபத்து குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் விரைந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தடைந்தனர். பின்பு பேருந்தில் சிக்கி தவித்த பயணிகளை அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். 


நள்ளிரவில் அரசு பேருந்து மணல் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.




மேலும் இது குறித்து அப்பகுதி மக்களிடையே கேட்டபோது அவர்கள் கூறியது என்னவெனில், “திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக திருச்சி அருகே சிறுகனூர், பாடாலூர் பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மிக அதிக வேகமாக செல்கிறது. அதேசமயம் பொதுமக்கள் சாலைகளை கடக்க வேண்டும் என்றாலே ஒரு அச்சத்துடன் கடப்பதாக தெரிவித்தனர். 


குறிப்பாக இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடைபெறுகிறது. சில சமயங்களில் உயிர் இழப்புகள் அதிகமாக நடந்துள்ளது. ஆகையால் வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். 


மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்காக நடவடிக்கை வேண்டும். குறிப்பாக அரசு பேருந்துகள், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இரவு,பகலாக நேரமில்லாமல் , ஓய்வெடுக்காமல் பேருந்து இயக்கி வருகிறார்கள். இதனால் சில சமயங்களில் பேருந்துகள், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இதுபோன்ற விபத்துக்கள் நடக்கிறது. ஆகையால் இவற்றை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.