திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி , செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார்.  


மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், திருச்சி வேலுசாமி, சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ், தமிழ்நாடு இளைஞர் அணி காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் விச்சு. லெனின் பிரசாத் மற்றும் மாவட்ட தலைவர்கள், நகர, பேரூராட்சி, வட்டம், பகுதி, நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஆலோசனை கட்டத்தில் கலந்துக்கொண்டனர்


சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மேடை பேச்சு.. 


திருச்சியில் ரொம்ப காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி எழுச்சி பெற்றுள்ளது. எப்போதுமே உண்மையாக உழைத்தால், உழைப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் இடம் உண்டு. 




தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 100 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும்


தற்போது காங்கிரஸ் கட்சியில் 18 எம்.எல்.ஏ உள்ளனர். ஆனால் வரும் 2026 ஆம் ஆண்டு 100 எம்.எல்.ஏக்கள் இருக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். கட்சியில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் நிலவுவது வழக்கம்தான். ஆனால் அவற்றை முற்றிலும் அகற்றிவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி மாபெரும் எழுச்சி பெறும். அண்ணாமலை IPS படிப்பிற்கும், அவருக்கும் தகுதி இல்லாத போன்று நடந்து கொள்கிறார். தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பாஜக கால் ஊன்ற முடியாது. தமிழ்நாட்டு மக்களிடையே மோடியின் வித்தைகள் செல்லாது. தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல, எதையும் சிந்தித்து செயல்படுபவர்கள்.  ஒருபோதும் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என தெரிவித்தார்.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உண்மையாக உழைக்க வேண்டும். நமது கட்சியினை பலப்படுத்த அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். நமது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிரச்சார சுற்றுப்பயணம் மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. நமது கட்சியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை உதறிவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.


தமிழ்நாட்டில் காங்கிரஸ் கமிட்டி மாபெரும் முதன்மை இயக்கமாக திகழ அனைவரும் பாடுபட வேண்டும். தமிழ்நாட்டில் காமராஜர் அவர்களின் ஆட்சி காலத்தில் பல்வேறு திட்ட பணிகள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டது. அதுபோன்று மீண்டும் காமராஜர் ஆட்சி அமைவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணிகளை தீவிரப்படுத்தி செயலாற்ற வேண்டும்.


இனிவரும் காலங்களில் நடைபெற உள்ள அனைத்து தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பல்வேறு பதவிகளில் பொறுப்பேற்க வேண்டும் அதற்கு ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும் என்பது முக்கியம் ஆகும் என்றார்.