திருச்சி விமான நிலையத்திலிருந்து அதிக அளவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு  விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 


குறிப்பாக  கடந்த சில மாதங்களாக விமான நிலைய வளாகத்திலும், அதன் நுழைவு வாயில் பகுதியிலும் சுற்றித்திரியும் நபர்களிடமிருந்து எந்தவித ஆவணமும் இல்லாத வகையில் தங்க நகைகள் வைத்து இருந்தால் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 


மேலும் திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து கடத்தல் தங்கம் அதிகரித்து வருவதால், அவற்றை முற்றிலும் தடுப்பதற்காக சுங்கதுறை அதிகாரிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்




திருச்சியில் பெண் பயணிடம் இருந்து ரூ 1.53 கோடி தங்க நகைகள் பறிமதல்


இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது பெண் பயணி ஒருவரிடம் இருந்து ஏராளமான 22 மற்றும் 24 கேரட் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.


எவ்வித ஆவணமும் இன்றி சுங்க வரி செலுத்தாமலும் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 2291 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். ரூபாய் ஒரு கோடி 53 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.




கடத்தல் கூடாரமாக மாறுகிறது.  திருச்சி விமான நிலையம்..


மேலும் இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது.. சுங்கத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு பிட் தங்கத்தைக்கூட கடத்திவர முடியாது. ஆனால், திருச்சி விமான நிலையத்தில் கிலோ கணக்கில் தங்கத்தைக் கடத்திவருகிறார்கள். இது எப்படிச் சாத்தியம் என கேள்வி எழுப்பினர். மேலும் பல சிறப்புகளைக்கொண்ட விமான நிலையம், தற்போது தங்கம் கடத்திவரும் கூடாரமாக மாறியிருக்கிறது.


குறிப்பாக ஒவ்வொரு விமான நிலையத்திலும் அதிநுட்பமான ஸ்கேனர் இருக்கிறது. அது மனித உடலிலுள்ள நரம்புகள் முதல் தசைகள் வரையிலும் ஸ்கேன் செய்யும் வல்லமைகொண்டது.ஆனால், இங்கு கிலோ கணக்கில் தங்கம் சர்வ சாதாரணமாக வெளியே வருகிறது என்றால் எப்படிச் சாத்தியம்? கஸ்டம்ஸ் அதிகாரிகளின் தொடர்பு இல்லாமல் கடத்தல் தங்கம் வெளியே வர வாய்ப்பே இல்லை. இதுவும் பிரச்னைகள் நடந்த பிறகுதான் நமக்குத் தெரியவருகிறது. இதுபோல் எத்தனை கிலோ தங்கம் வெளியே சென்றது என்று தெரியவில்லை. தங்கத்தைக் கடத்தி வருவதற்குத் திருச்சியில் பெரிய நெட்வொர்க் இருக்கிறது. என தெரிவித்தனர்.