இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தேவநாதன் யாதவ் கைது..


நிதி மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவரும், பாஜக ஆதரவாளரும்யான தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மீது ரூ.50 கோடி வரை மோசடி நடைபெற்றதாக 140-க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்து உள்ளனர்.


தனியார் தொலைக்காட்சி உரிமையாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவராகவும் உள்ள தேவநாதன் யாதவ், சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் ‘தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட்’ என்ற நிதி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.


கடந்த 1872 ஆம் ஆண்டு முதல் இந்த நிதி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து நிதியை பெற்று சுமார் ரூ.50 கோடி வரை நிதி மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது.




இந்த மோசடி தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி அந்த நிறுவனத்திற்கு முன்பாக 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். 


இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், திருச்சியில் தேவநாதன் யாதவை கைது செய்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், திருச்சியில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், தற்போது தேவநாதனை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திருச்சியில் இருந்து சென்னைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  அழைத்து சென்றனர்.