திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் மகாத்மா காந்தியடிகள் திருச்சி வருகையின் போது அமர்ந்திருந்த காந்தி மரம் என்றழைக்கப்படும் அரச மரத்தடியின்  கீழ் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்..


”திருச்சி மாவட்டம் என் வாழ்நாளில் நெருங்கிய தொடர்புடைய மாவட்டம். இங்கு நான் படித்த நினைவலைகள் தற்போது ஞாபகம் வருகிறது. திருச்சி  மாவட்டம் மிக முக்கியமானது, கலாச்சாரத்துடன் பிணைந்த கல்வியைக் கொண்டது. நம் அடையாளமே தேசியம் தான். டிஜிட்டல் மூலம் நம் நாடு மேன்மை அடைந்து வருகிறது. பல நாடுகளில் இருந்து G20 மூலம் பல பிரதமர்கள் இந்தியா வருகிறார்கள் . அவர்கள் இந்தியாவை பாராட்டுகிறார்கள் 10 வருடத்திற்குள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை கிராமப்புற பெண்கள் வரை கொண்டு சேர்த்து எளிமையாக்கி உள்ளோம். டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பண பரிவர்த்தனை மட்டுமல்லாது தடுப்பூசிகள் போடுவது மற்றும் அதை நினைவுபடுத்துவது வரை மேம்படுத்தி உள்ளோம்” என்றார்.


கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விஷயங்கள் செய்துள்ளோம். இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நாடு இவ்வளவு முன்னேறி உள்ளது என்று பிற நாடுகள் ஆச்சரியப்படுகிறார்கள். நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைமைப்பண்பு வரைவேண்டும். இந்தியாவில் ஆண், பெண், பாலின உயர்வு, தாழ்வு இன்றளவும் உள்ளது. அந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக பாரதப் பிரதமர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.




மேலும், ”பாலின உயர்வு தாழ்வு களையப்பட வேண்டும் என்பதே பிரதமரின் எண்ணமாக உள்ளது.பெண்களுக்கு வாய்ப்பு தகுதியும் ஏற்படுத்தும் வண்ணம் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் நிலையில் இருந்து நல்ல மேம்படுத்தப்பட்ட இந்தியாவாக 2047 ஆம் ஆண்டிற்குள் நாடு நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும்” என்றார்.


”ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் இன்னும் முன்னேற வேண்டிய மாவட்டங்கள், இதுபோன்று இந்தியா முழுவதும் உள்ள பின் தங்கிய மாநிலங்களை முன்னேற்றுவதே மோடியின் குறிக்கோளாக உள்ளது.


அரசமரத்தின் அடியில் தான் புத்தருக்கு ஞானம் கிடைத்தது. அரசமரம் நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கம். வரும் 2047 முன்னேற்ற மடைந்த நாடாக மாற்றுவதில் அனைவருக்கும் பங்கு உண்டு. அதற்கான உறுதிமொழியை நாம் ஏற்கவேண்டும். கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு  இந்தியா வசதி படைத்த நாடாக விளங்கியது. காந்தி இந்திய சுதந்திரத்திற்காக போராடினார் . நாம் இந்தியா பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக போராடுகிறோம்” என்றார்.