வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நேற்று உருவானது. இது தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவடைந்தது. இதனால் தமிழகத்தில் வருகிற 14-ந் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று அதிகனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் அது மேலும் வலு குறைந்து கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும். சென்னை மற்றும் புறநகரில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 21 இடங்களில் கனமழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், குமரிக்கடல், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களும் மாணவர்களும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த காலகட்டத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே சிறார்களும், மாணவர்களும் பொதுமக்களும் மிகவும் கவனமாக சாலையைக் கடக்க வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சில நேரங்களில் மின்னலின் தாக்கமும் இருக்கக்கூடும்.
குறிப்பாக எனவே திறந்த வெளி மற்றும் விவசாய நிலங்களில் விவசாயிகளும், பொதுமக்களும் இருப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய மாவட்டத்தில் மழையின் அளவு அதிகமாக இருக்கிற காரணத்தினால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.அதனால் சிறார்களும் மாணவர்களும் அதில் இறங்க வேண்டாம். பெற்றோர்கள் அவர்களை அனுமதிக்க வேண்டாம். நீர் நிலைகளில் இறங்கி எந்த ஒரு விபத்தும் நேரா வண்ணம் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த மழைக்காலத்தில் எந்த ஒரு விபத்தும் நிகழாத வண்ணம் திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்