தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி ‌மொத்தமுள்ள 27 வார்டுகளில், அதிமுக - 11, திமுக  - 8, சுயேச்சைகள் -5, காங்கிரஸ். -1, இ.கம்யூனிஸ்ட் -2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக, திமுக கூட்டணி இரண்டும் தலா 11 வார்டுகளில் வெற்றி பெற்று, சம நிலையில் உள்ளன. சுயேச்சைகளின் ஆதரவைப் பெறும் கட்சிக்கு தலைவர், துணைத் தலைவர் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 5 பேரும் திமுக முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவைச் சந்தித்து திமுகவிற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மணப்பாறை நகராட்சியும் திமுக வசம் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து சேர்மன் பதவிக்கு கடும்போட்டி நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து மணப்பாறை நகராட்சியை பற்றிய சிறிய குறிப்பை பார்க்கலாம்.. 




மணப்பாறை நகராட்சி 1966 வரை பஞ்சாயத்து யூனியனாக  இருந்தது. பின்பு 1966ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 18 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. பின்னர் 1974 ஆண்டு 20 வார்டுகளாக பிரிக்கப்பட்டபோது நடந்த நகராட்சி தேர்தலில் திமுக, காங்கிரஸ் தலா 9  கவுன்சிலர்கள் பெற்றது. எஞ்சிய இரண்டு வார்டுகளில் சுயேட்சையாக போட்டியிட்ட பெருமாள்,  சுப்புலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்று மறைமுக தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்தனர். இதனால் முதல் சேர்மன் பதவி திமுக வசம் சென்றது.  தொடர்ந்து 1986 மற்றும் 1996 நடந்த நகராட்சி சேர்மன் பதவிக்கான நேரடி தேர்தலில் திமுக கைப்பற்றியது. அதன் பின்னர் 27 வார்டுகளாக  பிரிக்கப்பட்டு  2001 நடந்த நகராட்சி நேரடி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற வக்கீல்  கண்ணையன் நகராட்சி சேர்மன் ஆக  பொறுப்பை ஏற்றார். ஒரு ஆண்டில் திமுகவில் இணைந்தார். பின்னர் 2006இல் நடந்த மறைமுக தேர்தலில் காங்கிரஸும், 2011இல் நடந்த நேரடி தேர்தலில் திமுகவும் நகராட்சி சேர்மன் பதவியை கைப்பற்றியது.




இதுவரை நகராட்சியில் நடந்த நேரடி, மறைமுக தேர்தல்களில் 4 முறை திமுகவும் , 1 முறை காங்கிரசும் சேர்மன் பதவி வகித்துள்ளனர். இப்போது நடந்துள்ள 7 நகராட்சி தேர்தலில் திமுக 8 இடங்கள்,  கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்கள், காங்கிரஸ் 1 இடங்கள் என  திமுக கூட்டணி 11  இடங்களை பிடித்துள்ளது. அதேபோல் அதிமுகவும் 11 இடங்களை பிடித்துள்ளனர். மேலும் சுயேட்சை  வேட்பாளர்கள் 5 வார்டுகளில்  வெற்றி பெற்றுள்ளனர். தொடர்ந்து வெற்றி சான்றிதழ்களை பெற்ற திமுக சுயேட்சை என அனைவரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  இந்நிலையில் சுயேட்சைகள் ஆதரவோடு சேர்மன் பதவியை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் திமுக நகர செயலாளர் கீதா மைக்கேல் ராஜ் , சுயேட்சையாக வெற்றி பெற்ற முருகன் மனைவி வசந்தா தேவி, திமுக சார்பில் வெற்றி பெற்ற சிவக்குமார் மனைவி சுமதி ஆகியோர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.