எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் - 2024 முன்னேற்பாடாக, இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 9 பறக்கும் படைகள் வீதம் திருச்சி மாவட்டத்திற்கு 81 பறக்கும் படைகள் மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் வீதம் திருச்சி மாவட்டத்திற்கு 81 நிலையான கண்காணிப்பு குழுக்களை ,  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்  நியமனம் செய்துள்ளார். மேலும், நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களில் உள்ள அலுவலர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் பயிற்சி வகுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் தேர்தல் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. 


குறிப்பாக பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணித்திட வேண்டும். நிலையான கண்காணிப்பு குழுக்களில் உள்ள அலுவலர்கள் முக்கியமான சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் பணிபுரிதல் வேண்டும், சோதனைகளின் போது பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ள கூடாது, அனைத்து சோதனைகளின் போதும் வீடியோ எடுப்பதை உறுதி செய்திட வேண்டும். ஒரே சாலையில் இரண்டு குழுக்கள் சோதனை செய்வதை தவிர்த்திட வேண்டும், நாள்தோறும் பறக்கும்படை அலுவலர்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களில் உள்ள அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும்.மேலும், கட்டுப்பாட்டு அறையிலிருந்து வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். 




மேலும், திருச்சி  மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் (139) திருச்சி மேற்கு (140) மற்றும் திருச்சி கிழக்கு (141) ஆகிய 3 தொகுதிகள் Expenditure Sensitive ஆக இந்திய தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ளதால், கூடுதல் கவனம் செலுத்தி சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட ESMS மற்றும் C Vigil செயலியில் உள்ளீடு செய்யப்பட்டவைகளை மாற்றம் செய்திட இயலாது என்பதால், கவனமாக பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். முக்கியமான தகவல்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பாக உடனுக்குடன் தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரிவித்திட வேண்டும் என தெரிவித்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட ESMS மற்றும் C Vigil செயலியில் எவ்வாறு உள்ளீடு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து விரிவாசு எடுத்துரைக்கப்பட்டது. மேற்கண்டுள்ள பயிற்சியின் போது பறக்கும்படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களில் உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி கையேடுகள் மற்றும் கைப்பற்றுகை மகஜர் வழங்கப்பட்டது.


இப்பயிற்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) புஷ்பலதா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.