திருச்சி மரக்கடை மேல்நிலை நீர் தேக்க தொட்டி வணிக வளாகத்தில் இயங்கி வரும் பாஸ்போர்ட் அலுவலகம் விரைவில் தில்லை நகருக்கு மாற்றப்பட உள்ளது. தில்லைநகர் 7-வது கிராஸ் பகுதியில் ரூ.15 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்று கட்டப்பட்டது. 50 ஆயிரத்து 275 சதுர அடியில் மூன்று தளத்துடன் இந்த கட்டிடம் அமைந்துள்ளது. தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வாடகைதாரர்களை கண்டறியும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. ஆனால் யாரும் பெரிய அளவுக்கு ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்பட்டது. திருச்சியை சேர்ந்த ஒரு டாக்டர் ஒட்டுமொத்த வணிக வளாகத்தையும் கடந்த 2020-ல் ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வாடகைக்கு எடுத்துக்கொள்ள ஒப்பந்தம் செய்தார். மேலும் 12 மாத வாடகை தொகை ரூ.85 லட்சத்து 86,000 அட்வான்ஸ் தொகையாக டெபாசிட் செய்தார். இருப்பினும் அரசின் வழிகாட்டி மதிப்பிலிருந்து வாடகை குறைவாக இருந்தது. இதனால் வெளிப்படை தன்மைகள் குறித்து கேள்விகள் எழுந்தன. இதையடுத்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் அந்த வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




மேலும் அந்த கட்டிடத்தில் இரண்டு மற்றும் மூன்றாவது தளத்தினை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கு மட்டும் தனியாக ரூ.5 லட்சத்து 49 ஆயிரம் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாடகை ஒப்பந்தத்திற்கான கடிதத்தை மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கி உள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகை ஒப்பந்தம் திருத்தி அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் டெபாசிட் செய்த முன்பணம் திருப்பி செலுத்தப்பட உள்ளது. தற்போதைய நிலையில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு 13 ஆயிரத்து 500 சதுர அடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் 37 ஆயிரம் சதுர அடி கட்டிடத்தையும் வாடகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.




இதுபற்றி மேயர் மு. அன்பழகன் கூறும்போது, பாஸ்போர்ட் அலுவலகம் தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய கட்டிடத்தினை வாடகைக்கு எடுக்க தலைமை தபால் அலுவலக அதிகாரிகள் பேசி வருகின்றனர். மேலும் தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களும் முயற்சி செய்கிறார்கள். ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை விட வாடகை வருவாயை இரு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் இந்த நடைமுறைகள் அனைத்தும் அரசின் ஒப்புதலோடு முறைபடி அறிவிக்கபட்டுள்ளது. ஆகையால் அனைவரும் தவறாமல் வரியை செலுத்த வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண