திருச்சியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் செய்தித்தாள்களில் எங்காவது ஒரு மூலையில் இருந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போது தலைப்புச்செய்தியாக நாள்தோறும் வந்து கொண்டு இருக்கிறது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்கியிருந்தால் விருதுநகர் சம்பவம் அரங்கேறி இருக்காது. விருதுநகர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களும் வெளியே சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதை நினைக்கும் போது ஆதங்கப்பட வைக்கிறது. இனியும் தாமதிக்காமல் பெண்கள் பாதுகாப்பிற்கு சட்டங்களை கடுமையாக திருத்த வேண்டும், இல்லாவிட்டால் நீதி கிடைக்காது, சமுதாயமும் மாறாது. மேலும் கூட்டு பாலியலில் ஈடுபட்டுள்ள 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை வெளியே விடக்கூடாது, இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் வயது போன்ற விஷயங்களால் அவர்கள் எளிதில் தண்டனையில் இருந்து தப்பவிடக்கூடாது. தமிழகத்தில் சக்கை போடு போடும் படங்கள் கன்னடம் மற்றும் தெலுங்கு, மலையாள படங்கள் தான், தெலுங்கிலும் நன்றாக ஓடிய படங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு நிலை மாறியுள்ளது.
தமிழ் சினிமாவும் உலக கண்டன்ட்டுக்கு இணையான கண்டன்ட் கொடுத்தால் மட்டுமே தாக்குபிடிக்க முடியும். கதாநாயகர்கள் மற்றும் விளம்பர உத்திகளை கொண்டு படம் எடுத்தால் அதனை மக்கள் நிராகரிக்கிறார்கள். ரசிகர்களுக்காக படம் எடுக்காமல் பொதுமக்களுக்காகவும் படம் எடுக்கவேண்டும். நான் மிகப்பெரிய விஜய் ரசிகன் என்பதால் அந்த படத்தை 4 தடவை பார்ப்பேன், மற்றவர்கள் அதனை ஒரு தடவையாவது பார்க்க வேண்டும். பிரம்மாண்டம் என்பது பிரம்மாண்டம் தான், கதைக்கும் காசுக்கும் சம்பந்தம் இல்லை. படத்துடைய வெற்றிக்கும், பட்ஜெட்டுக்கும் சம்பந்தமில்லை.
தமிழில் ஹிட்டடித்த படங்களுக்கு பிற மொழிகளுக்கு ரீமேக் ரைட்ஸ் கொடுத்து வந்த நிலை மாறி, தமிழ் சினிமா பொற்காலம் திரும்பி வரவேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம். தமிழ்மணம் மாறாத கதைகளை ராமராஜன், இளையராஜா காம்பினேஷன் அளித்தது, அந்த மாதிரியான படங்கள் திரும்பி வந்தால் நன்றாக இருக்கும். பேன் இந்தியாவிற்கு தமிழ் கலாச்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும். மேலும் இளையராஜா, மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பாராட்டிப் பேசியதாக மிகப்பெரிய சர்ச்சையாக உள்ளது. அம்பேத்கரை மதிக்கும் மோடியை எதிர்க்கும் கொள்கையுடையவர்கள். மேலும் கொள்கை ரீதியாக இரு துருவங்களாக இருக்கக்கூடியவர்களால் இளையராஜாதான் நினைத்த நல்ல விஷயத்தை சொன்னது அரசியலாக்கப்பட்டுள்ளது என்றார்.
குறிப்பாக ஜாதி, மதம், சமத்துவ முன்னேற்றம் என எல்லாவற்றையும் பேசுவதற்கு ராஜா சாருக்கு தகுதி உள்ளது. அவருடைய வார்த்தையில் உள்ள நல்ல பாசிட்டிவ் கருத்துகளை எடுத்துக் கொள்ளாமல் சில்லறைத்தனமாக அரசியலுக்கு ஏன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். புற்றுநோய் என்பது முதல் நிலையிலேயே கண்டறிந்தால் இழப்பு ஏற்படாது, தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் முளையிலேயே கிள்ளி எறிந்தால் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் அதனை ஜெயிக்கலாம். பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை, எனவே பெண்கள் நம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.