திருச்சி மாநகர் செயின்ட் ஜோசப் கல்லூரி, வணிகவியல் துறை பகல் பிரிவு கல்லுாரி 75ம் ஆண்டு விழாவும், மாலை பிரிவு கல்லுாரி 50ம் ஆண்டு விழாவும் நடைபெற்றது. வணிகவியல் துறை தலைவர் அலெக்சாண்டர் பிரவீன்துரை வரவேற்றார், கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் மற்றும் செயலாளர் அமல் வாழ்த்தி பேசினர்.


அப்துல்கலாம் படித்த கல்லூரி:


இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் எம்பி திருநாவுக்கரசர் கலந்துக்கொண்டு மாணவ,மாணவிகள் மத்தியில்  பேசியது, "செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்த மாணவர்கள் சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அரசியல், நீதித்துறை, திரைத்துறை, கலைத்துறை, வணிகத்துறை போன்ற பல்வேறு துறைகளில் இக்கல்லுாரி மாணவர்கள் சாதித்துள்ளனர். உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த விஞ்ஞானி அப்துல் கலாம் ஐயாவும் இங்கு தான் படித்தார். அவர் எப்போதும் மாணவர்களை பெரிதாக கனவுகள் காண சொல்வார்.


அதற்கேற்ப உங்கள் கனவுகளை நனவாக்க இன்றைய தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதை சரியாக பயன்படுத்தி முன்னேற வேண்டும். சாதி, மதம், இனம் ஆகிய எதுவும் மனிதனை மதிப்பிடுவது கிடையாது, அவனது உழைப்பும், வாழ்வில் அவன் அடைந்த உயரமும் தான் மதிப்பிடுகிறது. படுத்துக் கிடக்கும் குதிரைவாலில் குருவி கூட கூடு கட்டும் என்ற பழமொழி உள்ளது. அதற்கேற்ப வாழ்வில் வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும்.




3வது பெரிய பொருளாதார வளர்ச்சி:


மேலும், 2030ம் ஆண்டு இந்தியா 3வது பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்கிறது. அதற்கு மாணவர்கள் உழைப்பு நிச்சயம் தேவை. இந்தியர்கள் உலக முழுவதும் சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஷ் ஆகியோர் இதற்கு எடுத்தக்காட்டு. இன்றைய காலம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


இவ்விழாவில் ஆர்பிஐ அதிகாரி நாராயணசாமி, கல்லூரி ரெக்டர் பவுல்ராஜ் மைக்கேல், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வணிகவியல்துறை பேராசிரியர் பெர்க்மென்ஸ் நன்றி கூறினார்.


இதனை தொடர்ந்து திருச்சி தில்லை நகர் பகுதியில் தனியார் கடை திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட எம்பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்து பேசியது,


திருச்சி தலைநகராக வேண்டும்:


"திருச்சியை தலைநகரமாக மாற்ற வேண்டும் என திமுகவில் மூத்த தலைவர் முக்கிய பொறுப்பில் வகிக்கக்கூடிய துரைமுருகன் எம்ஜிஆரின் கனவும், கலைஞரின் கனவையும், தன்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துள்ளார். இதற்கு தற்போது இருக்கக்கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக நடவடிக்கை எடுத்து அதை நிறைவேற்ற வேண்டும் என்றார். 


ஆண்டுதோறும் மழைக் காலங்களில் சில பகுதிகள் பாதிப்பை சந்திக்கின்றது.  இவற்றுக்கு தற்போது புதிய திட்டத்தை உருவாக்கி இனிவரும் காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கது. ஒரே நாளில் அனைத்து தண்ணீர்களையும் அகற்ற முடியும் என்பது, இயலாத காரியம் படிப்படியாக இதற்கு முழுமையாக திமுக அரசில் தீர்வு காணப்படும். அதேபோல் அவர்கள் அறிவித்த அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு முழுமையாக சென்றடையும் அளவிற்கு செயல்படுத்துவார்கள். அமைச்சர் நேரு  முன் நின்று இனிவரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுப்பார்.




இந்தியா கூட்டணி:


5 மாநிலங்கள் தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றியை பெரும். இதன் தொடர்ச்சியாக இந்தியா கூட்டணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெரும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது காங்கிரஸ் கட்சியையும் அதனுடன் கூட்டணி இருக்கக்கூடிய திமுக கட்சியையும் ஒடுக்க வேண்டும் என்ற  எண்ணத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தேர்தல் களத்தில் வேட்பாளராக நிற்கக்கூடியவர்கள் அமலாக்கத்துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். திமுக அரசு மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.


போட்டியா?


மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சியில் நான் போட்டியிடுவதா?இல்லையா? என்பதை தலைமை கழகம் முடிவு செய்யும். அதேபோன்று தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட வேண்டும் என்பதெல்லாம் தேர்தல் தேதி அறிவித்த பிறகு கட்சியின் தலைமை முடிவு செய்யும். 


விவசாயிகளுக்கு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாமல் திமுக அரசு இல்லை. விவசாயிகள் போராட்டம் என்பது எம்ஜிஆர், கலைஞர் ,ஜெயலலிதா, ஆகியோர்கள் ஆட்சியில் இருக்கும் போதே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய பேச்சுவார்த்தை நடத்தி அவ்வப்போது சுமூக முடிவு காணப்படும். விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக திமுக அரசு நிறைவேற்றும் என தெரிவித்தார்.