திருச்சி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில்  விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இந்த குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்களுடைய பகுதிகளில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். அதில் மணகண்டம் ஒன்றியத்தில் உள்ள அதவத்தூர் கிராமத்தில் ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட புதிய ரக நெல்விதையால் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறி வளர்ந்த கதிர்களை கையில் எடுத்துவந்து மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.


மேலும் இதுதொடர்பாக விவசாயிகள் கூறியது.. 


திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட தாயனூர், அதவத்தூர், பள்ளக்காடு மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், கிணற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பியிருந்த விவசாயிகள் சம்பா பயிரிட்டுள்ளனர். அதவத்தூரில் உள்ள தனியார் விதை விற்பனை செய்யும் கடையில் குறுகிய கால நெல் விதையை வாங்கி பயன்படுத்தி உள்ளனர். இந்த நெல் விதையானது குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரும். உரம் தேவைப்படாது.




குறிப்பாக நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல் உள்ளிட்டவற்றை எதிர்க்கும் திறன் மிக்கது. 3.5 அடி முதல் 4 அடி வரையில் கதிர் வளரும். ஏக்கருக்கு குறைந்தபட்சம் 35 மூட்டை முதல் அதிகபட்சம் 45 மூட்டை வரை நெல் கிடைக்கும் என தனியார் விதை விற்பனையாளர் கூறியுள்ளார்.இதனை நம்பி சாய்மன் என்ற அந்த விதைகளை அதவத்தூர், தாயனூர் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்தனர். நடவு செய்து 12 நாள்களுக்கு பிறகு கதிர் வரும் நிலைக்கு முந்தைய நிலையை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். நெல் மணிகள் முளைக்காத நிலையில் இருப்பதால் வேளாண் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், கதிர் வளர்ந்து நெல் மணிகள் முளைத்துவிட்ட நிலையில் ஒரு கதிரில் 21 முதல் 26 நெல் மணிகள் மட்டுமே இருக்கின்றன. இதுதொடர்பாக, தனியார் விதை விற்பனையாளரிடம் புகார் கூறியதற்கு மெத்தனமாக பதில் கூறியுள்ளார். விதை வழங்கிய நிறுவனத்திடம் கேளுங்கள் என்கிறார். தரமற்ற விதையால் ஏக்கருக்கு 7 முதல் 8 மூட்டை நெல் கூட கிடைக்காத நிலையில் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.




இதனை தொடர்ந்து  தரமற்ற விதைகளை வழங்கிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்த கலெக்டர் பிரதீப்குமார், இந்த சம்பவம் தொடர்பாக வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் உரிய விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரம் மாநில அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. தரமற்ற விதைகள் என்பது ஆய்வில் தெரியவந்தால் தொடர்புடைய நிறுவனத்தின் விதைகளை கறுப்புப் பட்டியலில் வைக்கவும், அந்த நிறுவனத்தின் மீது மேல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.


பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் பேசிய தமாகா விவசாய அணியைச் சேர்ந்த ராஜேந்திரன் கூறுகையில், விவசாயிகளை நம்ப வைத்து ஏமாற்றிய மோசடி நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிறுவனத்திடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.