திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போலி பாஸ்போர்ட், விசா காலம் முடிந்தும் அனுமதி இல்லாமல் வசித்தது, போன்ற குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களான இலங்கை, வங்கதேசம், பல்கேரியா, நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 115 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். முகம் சிறை வளாகத்தில் சில மாதங்களுக்கு முன் ரூபாய் 5 கோடியில் சுற்றுச்சுவர், கைதிகளுக்கான அறைகள் மற்றும் கண்கானிப்பிற்காக 52 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சிறையில் உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம், தூக்க மாத்திரை தின்றும், வயிற்றை கிழித்து தற்கொலை முயற்சிகள் என பல்வேறு கட்ட போராட்டங்களில் இலங்கை தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.




இலங்கை தமிழர்கள் தொடர்ந்து எங்களை விடுதலை செய்ய வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சிலர் தற்கொலை முயற்சி செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர் உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிறப்பு முகாமிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார், இது  குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் தொடர்ந்து இலங்கை தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஆகையால் காவல்துறையினர் மிகுந்த கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.


கடந்த 2019ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல்கேரியா சேர்ந்த இலியன் ஜிட்ராகர் மார்கோல் (54) என்பவரின் அறை  கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்ததும், இதில் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அருகில் உள்ள அறையை சேர்ந்த கைதி ஒருவர் நேற்று காலை அருகில் உள்ள அறையை எட்டி பார்த்தபோது அறையின் மேல் பகுதியில் ஜன்னலில் உள்ள கம்பிகள் அறுக்கப்படும் அறையில் அவர் இல்லாததும் தெரியவந்தது,  இதுகுறித்து முகாம் சிறைக் காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.




விரைந்து வந்து பார்த்தபோது கம்பிகளை அறுத்து கைதி தப்பி சென்றது தெரியவந்தது, இதையடுத்து சிறை அகதிகள் முகாம் சிறையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர், அதில் அறையில் இருந்து குதித்த கைதி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அதிகாரிகள் குடியிருப்பு பின்பகுதியில் உள்ள முட்புதர்கள் வழியே தப்பி சென்றது தெரியவந்தது.


இதையடுத்து தகவல் அறிந்து முகாம் சிறைக்கு சென்ற திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருண்,  தப்பிச்சென்ற கைது குறித்தும் மற்றும் பணியில் இருந்த சிறைக்காவலரிடமும்  தீவிர விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட காவல் நிலையம், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களுக்கு இலியன் ஜிட்ராகர் மார்கோவ் புகைப்படத்தை அனுப்பி வைத்து  தீவிர தேடுதல் வேட்டையை நடத்த உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து கே.கே. நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர். இதேபோல் கடந்த 2018 ஆண்டு  நைஜீரியாவை சேர்ந்த கைதி ஒருவர் மரத்தில் ஏறி காம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்து தப்பி சென்றார்  தப்பிய கைதியை தனிப்படை காவல்துறையினர் 10 நாட்களுக்கு பின்னர் அவரை டெல்லியில் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.