தொலைபேசி வாயிலாக மர்ம நபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் பயணிகள் கூட்டத்தால் அலைமோதும் இந்த விமான நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், உள்ளூர் போலீஸாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


அதே வேளையில், பயணிகள் அழைத்து வரும் வாகனங்கள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், திங்கள்கிழமை மதியம் 1.46 மணிக்கு திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் அலுவலகத்தில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்ட பேசிய மர்ம நபர், விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சற்று நேரத்தில் வெடிக்க பேகிறது எனவும் கூறிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மெட்டல் டிடெக்டர் மற்றும் நவீன கருவிகள் கொண்டு வெடிகுண்டு உள்ளதா என விமான நிலையம் முழுவதும் பலத்த சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.


மேலும், விமான நிலையத்துக்குள் வரும் அனைத்து தரப்பினரையும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்தனர். இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விமான நிலைய இயக்குநர் சுப்ரமணி, திருச்சி மாநகர போலீஸார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். மர்ம நபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.